2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பிளிஸ்கோவாவிடம் தோற்று வெளியேறினார் செரீனா

Editorial   / 2019 ஜனவரி 23 , பி.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் 10ஆவது நாளான இன்று, 23 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

உலகின் எட்டாம் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவை எதிர்கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதலாவது செட்டை 4-6 என இழந்திருந்தார்.

எனினும், சுதாகரித்துக் கொண்ட 37 வயதான செரீனா வில்லியம்ஸ் இரண்டாவது செட்டை 6-4 எனக் கைப்பற்றியதுடன், தீர்மானமிக்க மூன்றாவது செட்டில் 5-1 என முன்னிலையிலிருந்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

எவ்வாறாயினும், அபாரமான மீள்வருகையை புரிந்த செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, 7-5 என்ற செட் கணக்கில் மூன்றாவது செட்டை வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற மற்றொரு காலிறுதிப் போட்டியில், உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான உக்ரேனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்கொண்ட உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற ஆண்களுக்கான காலிறுதிப் போட்டியொன்றில், உலகின் ஒன்பதாம் நிலை வீரரான ஜப்பானின் கீ நிஷிகோரியை எதிர்கொண்ட உலகின் முதல்நிலை வீரரான சேர்பியாவின் நொவக் ஜோக்கோவிச், 6-1 என முதலாவது செட்டை வென்றதுடன், இரண்டாவது செட்டில் 4-1 என முன்னிலையில் இருந்த நிலையில், உபாதை காரணமாக போட்டியிலிருந்து நிஷிகோரி விலக அரையிறுதிப் போட்டிக்கு ஜோக்கோவிச் தகுதிபெற்றார்.

இதேவேளை, இன்று இடம்பெற்ற பிறிதொரு காலிறுதிப் போட்டியில், 7-6 (7-4), 6-3, 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் கனடாவின் மிலோஸ் றாவோனிஸை வென்ற பிரான்ஸின் லூகாஸ் போலி தனது முதலாவது கிரான்ட் ஸ்லாம் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இந்நிலையில், இலங்கை நேரப்படி நாளை காலை 8.30மணிக்கு இடம்பெறவுள்ள பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியொன்றில் ஐக்கிய அமெரிக்காவின் டேனியல் கொலின்ஸை உலகின் ஆறாம்நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவா எதிர்கொள்ளவுள்ளதுடன், காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள மற்றைய அரையிறுதிப் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவாவை நயோமி ஒஸாகா எதிர்கொள்கிறார்.

இதேவேளை, இலங்கை நேரப்படி நாளை  பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ள ஆண்களுக்கான அரையிறுதிப் போட்டியொன்றில் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்டிபாஸை உலகின் இரண்டாம்நிலை வீரரான ஸ்பெய்னின் ரபேல் நடால் எதிர்கொள்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .