2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பெயார்ண் மியூனிச்சை வென்றது றியல் மட்ரிட்

Editorial   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிப் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டியில் ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பெயார்ண் மியூனிச்சை, சம்பியன்ஸ் லீக்கின் நடப்புச் சம்பியன்களான றியல் மட்ரிட் வென்றுள்ளது.

தமது மைதானத்தில், இலங்கை நேரப்படி இன்று காலை இடம்பெற்ற இப்போட்டியில், ஏற்கெனவே காயம் காரணமாக டேவிட் அலபா, ஆர்துரோ விடால், கிங்ஸ்லி கோமன், கோல் காப்பாளர் மனுவல் நோயர் இல்லாமல் தவிக்கின்ற பெயார்ண் மியூனிச் போட்டியின் எட்டாவது நிமிடத்தில் காயம் காரணமாக ஆர்ஜன் ரொபினையும் இழந்தது. இவரை தியாகோ அல்கான்டரா பிரதியீடு செய்திருந்தார்.

எவ்வாறெனினும், போட்டியின் 28ஆவது நிமிடத்தில் பெயார்ண் மியூனிச்சின் ஜோஷுவா கிம்மிச் பெற்ற கோல் காரணமாக பெயார்ண் மியூனிச் முன்னிலை பெற்றது. இக்கோலைத் தொடர்ந்து பெயார்ண் மியூனிச்சின் ஜெரோம் பூட்டாங் காயமடைய, நிக்லஸ் சுலேயால் அவர் பிரதியீடு செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், முதற்பாதி முடிவடைய ஒரு நிமிடமிருக்கையில், றியல் மட்ரிட்டின் டானியல் கர்வகால் தலையால் முட்டிக் கொடுத்த பந்தை அவரின் சக வீரர் மார்ஷெல்லோ கோலாக்கி கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

இதையடுத்து முதற்பாதி முடிவடைய முன்னர் பெயார்ண் மியூனிச்சின் றொபேர்ட் லெவன்டோஸ்கி தலையால் முட்டிய பந்து நேரேயே றியல் மட்ரிட்டின் கோல் காப்பாளர் கெய்லர் நவாஸிடம் சென்றிருந்ததோடு, பின்னர் பெயார்ண் மியூனிச்சின் அணித்தலைவர் தோமஸ் முல்லர் தலையால் முட்டிய பந்தை றியல் மட்ரிட்டின் அணித்தலைவர் சேர்ஜியோ றாமோஸ் தடுக்க 1-1 என்ற கோல் கணக்கில் முதற்பாதி சமநிலையில் முடிவடைந்தது.

இரண்டாவது பாதியில், தமது பெனால்டி பகுதிக்குள் பெயார்ண் மியூனிச்சின் றபின்காவிடமிருந்து பந்தைப் பறித்த, முதற்பாதி முடிவில் றியல் மட்ரிட்டின் இஸ்கோவைப் பிரதியீடு செய்த மார்கோஸ் அஸென்ஸியோ அப்பந்தை சக வீரர் லூகாஸ் வஸ்கூஸிடம் கொடுத்து, பின்னர் அவரிடமிருந்து பெற்று போட்டியின் 57ஆவது நிமிடத்தில் கோலாக்க றியல் மட்ரிட் முன்னிலை பெற்றுக் கொண்டது. இதையடுத்து, பெயார்ண் மியூனிச்சின் பிராங் றிபெரி கோல் கம்பத்தை நோக்கி இரண்டு உதைகளை உதைத்தபோதும் அவற்றை கெய்லர் நவாஸ் தடுத்திருந்தார்.

பின்னர், காயம் காரணமாக டானியல் கர்வகாலை இழந்திருந்த றியல் மட்ரிட், அவரை கரிம் பென்ஸீமாவை பிரதியீடு செய்திருந்தது. போட்டியின் 71ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தானொரு கோலைப் பெற்றதாகக் கருதியபோதும் அவரின் கையில் பட்டு பந்து வந்தமை காரணமாக அக்கோல் வழங்கப்படவில்லை. பின்னர் கரிம் பென்ஸீமாவின் உதையொன்றை பெயார்ண் மியூனிச்சின் கோல் காப்பாளர் ஸ்வென்ட் உல்ரெய்ச் தடுத்திருந்தார்.

இந்நிலையில், போட்டி முடிவடைய இரண்டு நிமிடங்கள் முன்னர் கோலெண்ணிக்கையை றொபேர்ட் லெவன்டோஸ்கி சமப்படுத்தியிருக்க முடியுமென்றபோதும் அவர் தனது உதையை கோல் கம்பத்துக்கு வெளியால் செலுத்த 2-1 என்ற கோல் கணக்கில் இப்போட்டியில் றியல் மட்ரிட் வென்று கொண்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .