2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முகுருஸா, ஷரபோவா வெளியேற்றம்

Editorial   / 2017 செப்டெம்பர் 05 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் 7ஆம் நாள் போட்டிகளில், 3ஆம் நிலை வீராங்கனையான கார்பைன் முகுருஸா தோல்வியடைந்தார். அதேபோன்று, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய முன்னாள் முதல்நிலை வீராங்கனை மரியா ஷரபோவாவும் தோல்வியடைந்தார்.

4ஆவது சுற்றுப் போட்டிகளில், 13ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பெட்ரா குவிற்றோவாவும் ஸ்பெய்னின் முகுருஸாவும் மோதினர். இதில் முதலாவது செட்டை 7-6 என்ற புள்ளிகள் கணக்கில் போராடிக் கைப்பற்றிய குவிற்றோவா, 2ஆவது செட்டை 6-3 என்ற புள்ளிகள் கணக்கில் இலகுவாகப் பெற்று, காலிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றார்.

9ஆம் நிலை வீராங்கனையான ஐ.அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெய்னின் கார்லா சுவரேஸ் நவரோவை எதிர்கொண்ட நிலையில், 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டார். உடல் உபாதை காரணமாகத் தடுமாறிய வீனஸ், போராடியே வெற்றிபெற்றார்.

16ஆம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்தசிஜா செவஸ்டோவா, ரஷ்யாவின் ஷரபோவாவை எதிர்கொண்டார். தரவரிசைப்படி, செவஸ்டோவாவுக்கு அதிக வாய்ப்புகள் இருந்தாலும், ஷரபோவாவின் சிறப்பான ஃபோர்ம் காரணமாக, ஷரபோவாவுக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது.

அவ்வாறே, முதலாவது செட்டை 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய ஷரபோவா, அடுத்த 2 செட்களிலும் 4-6, 2-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறினார்.

ஆண்களில் 12ஆம் நிலை வீரரான ஸ்பெய்னின் பப்லோ கரெனோ பஸ்டா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை எதிர்கொண்டு, 7-6, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்குத் தகுதிபெற்றார்.

17ஆம் நிலை வீரரான ஐ.அமெரிக்காவின் சாம் குவரே, 23ஆம் நிலை வீரரான ஜேர்மனியைச் சேர்ந்த மிஸ்சா ஸவெரேவை எதிர்கொண்டு, 6-2, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .