2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முதலாமிடத்துக்கு மீண்டும் முன்னேறியது மன்செஸ்டர் சிற்றி

Editorial   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரின் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலாமிடத்துக்கு நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் சிற்றி முன்னேறியுள்ளது.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார்டிஃப் சிற்றியுடனான போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இங்கிலாந்து பிறீமியர் லீக்கின் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலாமிடத்துக்கு மன்செஸ்டர் சிற்றி முன்னேறியுள்ளது.

இப்போட்டியின் ஆறாவது நிமிடத்தில், சக பின்களவீரரான அய்மரிக் லபோர்ட்டேயிடமிருந்து பெற்ற பந்தைக் கோலாக்கிய மன்செஸ்டர் சிற்றியின் மத்தியகளவீரர் கெவின் டி ப்ரூனே, தனதணிக்கு முன்னிலையை வழங்கினார். பின்னர், முதற்பாதி முடிவடைய ஒரு நிமிடமிருக்க, சக முன்களவீரரான கப்ரியல் ஜெஸூஸால் வழங்கப்பட்ட பந்தை மன்செஸ்டர் சிற்றியின் இன்னொரு முன்களவீரரான லெரோய் சனே கோலாக்கியதோடு இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வென்றது.

மன்செஸ்டர் சிற்றியின் இளம் மத்தியகளவீரர் பில் பொடெனின் கோல் கம்பத்தை நோக்கிய இரண்டு உதைகளை கார்டிஃப் சிற்றியின் கோல் காப்பாளர் நீல் எதெரிட்ஜ் தடுத்திருந்தார்.

அந்தவகையில், இப்போட்டியின் முடிவில் 80 புள்ளிகளைப் பெற்ற மன்செஸ்டர் சிற்றி, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகளின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு முன்னேறியது. 79 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் லிவர்பூல் காணப்படுகின்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கிறிஸ்டல் பலஸுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வென்ற டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியது. டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் சார்பாக, சண் ஹெயுங்-மின், கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், 64 புள்ளிகளுடன் இங்கிலாந்து பீறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், அவ்வணியை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ள ஆர்சனல்  63 புள்ளிகளுடன் நான்காமிடத்தில் காணப்படுகின்றது.

இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனுடனான போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்ற செல்சி, இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியது. செல்சி சார்பாக, ஒலிவர் ஜிரூட், ஈடின் ஹஸார்ட், ருபென் லொவ்ஃப்டஸ்-சீக் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

அந்தவகையில், செல்சி 63 புள்ளிகளைப் பெற்றே இங்கிலாந்து பிறீமியர் லீக் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளநிலையில், ஆர்சனலும் 63 புள்ளிகளையே பெற்றுள்ளபோதும் கோலெண்ணிக்கை வித்தியாசத்தில் நான்காமிடத்தில் காணப்படுவதுடன், செல்சியை விட ஒரு போட்டி குறைவாக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆறாமிடத்தில் 61 புள்ளிகளுடன் மன்செஸ்டர் யுனைட்டெட் காணப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .