2024 மே 08, புதன்கிழமை

மெஸ்ஸியின் கோலோடு லா லிகாவை தக்க வைத்தது பார்சிலோனா

Editorial   / 2019 ஏப்ரல் 28 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானியக் கழகங்களுக்கு இடையிலான லா லிகா தொடரில், நடப்புச் சம்பியன்களான பார்சிலோனா, மாற்றுவீரராகக் களமிறங்கிய தமதணித் தலைவர் லியனல் மெஸ்ஸி பெற்ற கோலின் மூலம் லெவன்டேயை வென்று 26ஆவது தடவையாக இன்று அதிகாலை சம்பியனாகியது.

தமது மைதனாத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின் 61ஆவது நிமிடத்தில், சக மத்தியகளவீரர் அர்துரோ விடால் தலையால் முட்டி வழங்கிய பந்தையே கோலாக்கிய பார்சிலோனாவின் நட்சத்திரவீரரான லியனல் மெஸ்ஸி, தனதணிக்கு குறித்த போட்டியில் வெற்றியையும், லா லிகா சம்பியன் பட்டத்தையும் வழங்கினார்.

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூலை தமது மைதானத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை அதிகாலை பார்சிலோனா எதிர்கொள்ளவுள்ள நிலையில், சக சிரேஷ்ட மத்தியகளவீரரான சேர்ஜியோ புஷ்கட்ஸுடன் குறித்த போட்டியை லியனல் மெஸ்ஸி ஆரம்பித்திருக்கவில்லை.

எவ்வாறெனினும், குறித்த போட்டியின் முதற்பாதியில் கோல் பெறும் வாய்ப்புகளை பார்சிலோனாவின் மத்தியகளவீரரான பிலிப் கோச்சினியோ கொண்டிருந்ததுடன், ஒரு தடவை அவரின் உதை கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தபோதும், முதற்பாதியில் கோலெதுவும் பெறப்பட்டிருக்காத நிலையில், இரண்டாவது பாதியில் லியனல் மெஸ்ஸி மூலம் பிலிப் கோச்சினியோ பிரதியீடு செய்திருந்தார்.

இந்நிலையில், லெவன்டேயின் முன்களவீரரான ஜொஸே லூயிஸ் மொராலெஸ் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்தும் வாய்ப்பைக் கொண்டிருந்தபோதும், அவர் கோல் கம்பத்துக்கு மேலால் தனதுதையைச் செலுத்தியிருந்ததுடன், போட்டியின் இறுதிக் கட்டங்களில் லெவன்டேயின் வீரர்கள் கோல் கம்பத்தை நோக்கி செலுத்திய உதைகள் கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியிருந்தன.

அந்தவகையில், நடப்பு லா லிகா பருவகாலத்தில் இன்னும் மூன்று போட்டிகள் கைவசமிருக்கையில், லா லிகா புள்ளிகள் பட்டியலில் இரண்டாமிடத்திலுள்ள அத்லெட்டிகோ மட்ரிட்டின் 74 புள்ளிகளை விட ஒன்பது புள்ளிகள் அதிகமாக 83 புள்ளிகளைக் கொண்டிருப்பதுடன், அவ்வணியுடனான நேருக்கு நேரான போட்டிகளில் மேம்பட்ட பெறுபேறுகளைக் கொண்டிருக்கின்ற நிலையிலேயே லா லிகாவில் குறித்த போட்டியுடன் பார்சிலோனா சம்பியனாகியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X