2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யுனைட்டெட் – செவில்லா போட்டி சமநிலை

Editorial   / 2018 பெப்ரவரி 22 , பி.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கான சுற்றில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட், செவில்லா அணிகளுக்கிடையிலான முதலாவது சுற்றுப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

ஸ்பானிய லா லிகா கழகமான செவில்லாவின் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட் கோல் காப்பாளர் டேவிட் டி கியா மேற்கொண்ட தடுப்புகள் காரணமாகவே சமநிலையில் முடிவடைந்திருந்தது.

இப்போட்டியின் முதற்பாதியில் ஜோக்கின் கொரேரா, ஸ்டீவன் ஸொன்ஸி ஆகியோரின் கோல் கம்பத்தை நோக்கிய உதைகளை விரைவாக செயற்பட்டுத் தடுத்த டேவிட் டி கியா, முதற்பாதி முடிவில் லூயிஸ் முரியேல் தலையால் முட்டிய பந்தை மிக அபாரமாக ஒரு கையால் தடுத்திருந்தார்.

மறுபக்கம், மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பை கோல் கம்பத்துக்கு மேலால் றொமேலு லுக்காக்கு செலுத்தியதோடு, மாற்று வீரராகக் களமிறங்கிய மார்க்கஸ் றஷ்போர்ட் போட்டியின் இறுதிக் கணங்களில் உதைத்த உதையொன்று கோல் கம்பத்துக்கு வெளியே சென்றிருந்தது. அந்தவகையில், இரண்டு அணிகளும் கோலெதனையும் பெறாத நிலையில் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.

இதேவேளை, தமது மைதானத்தில் இடம்பெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான றோமாவுக்கெதிரான போட்டியில் உக்ரேனியக் கழகமான ஷக்தார் டொனெடெஸ்க் வென்றது.

இப்போட்டியின் 41ஆவது நிமிடத்தில் கோலைப் பெற்ற றோமாவின் சென்கிஸ் அன்டர் தனது அணிக்கு முன்னிலையை வழங்கியபோதும் 52ஆவது நிமிடத்தில் பகுன்டோ பெர்ரெய்ரா பெற்ற கோலின் மூலம் கோலெண்ணிக்கையைச் சமப்படுத்திய ஷக்தார் டொனெடெஸ்க், போட்டியின் 71ஆவது நிமிடத்தில் கிடைத்த பிறீ கிக்கை பிறெட் கோலாக்க, 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .