2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

றோகித் ‘ருத்ர தாண்டவம்’

Editorial   / 2017 டிசெம்பர் 14 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், நேற்று (13) நடைபெற்ற இரண்டாவது போட்டியில், இந்திய அணியின் தற்காலிகத் தலைவரான றோகித் ஷர்மா, இரட்டைச் சதம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.

மொஹாலியில் இடம்பெற்ற இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இந்தியா சார்பாகக் களமிறங்கிய றோகித் ஷர்மாவும், ஷீகர் தவானும், முதலாவது விக்கெட்டுக்காக 115 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்காக, றோகித்துடன் இணை சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர், 213 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அவரின் விக்கெட்டின் பின்னரும் அதிரடியாக விளையாடிய றோகித் ஷர்மா, தனது 151ஆவது பந்தில் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

இறுதி ஓவர் ஆரம்பிக்கும் போது, 191 ஓட்டங்களுடன் காணப்பட்ட றோகித், அந்த ஓவரின் முதலாவது பந்தை 6 ஓட்டங்களுக்கு விளாசியதோடு, அடுத்த இரண்டு பந்துகளிலும் தலா 2 ஓட்டங்களைப் பெற்று, இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்தார். இறுதியில் அவர், 153 பந்துளில் ஆட்டமிழக்காது 208 ஓட்டங்களுடன் காணப்பட்டார்.

ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், றோகித் ஷர்மா பெறும் 3ஆவது இரட்டைச் சதம் இதுவாகும்.

ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட முதலாவது இரட்டைச் சதத்தை, இந்தியாவின் சச்சின் டென்டுல்கர் 2010ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்டார். பின்னர், 2011ஆம் ஆண்டில் விரேந்தர் செவாக், இரண்டாவது இரட்டைச் சதத்தைப் பெற்றார். அப்போது, மறுமுனையில் றோகித் ஷர்மாவே துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தார்.

2013ஆம் ஆண்டில், தனது முதலாவது இரட்டைச் சதத்தை றோகித் பதிவுசெய்ததோடு, அது இடம்பெற்று ஓராண்டில், தனது இரண்டாவது இரட்டைச் சதத்தைப் பதிவுசெய்தார். இலங்கைக்கெதிராக அவர் பெற்ற 264 ஓட்டங்களே, ஆண்களுக்கான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட அதிகூடிய தனிநபர் ஓட்டங்களாக இன்னமும் காணப்படுகின்றன. தற்போது றோகித் ஷர்மா, மீண்டும் இரட்டைச் சதம் பெற்றுள்ளார்.

இப்போட்டியில் இந்திய அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்களைப் பெற்றது. றோகித் தவிர, ஷ்ரேயாஸ் ஐயர் 88 (70), ஷீகர் தவான் 68 (67) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் திஸர பெரேரா, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதிலும், 8 ஓவர்களில் 80 ஓட்டங்களை வாரி வழங்கினார். நுவான் பிரதீப், 10 ஓவர்களில் 106 ஓட்டங்களை வழங்கினார். இது, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இலங்கை வீரரொருவர் வழங்கிய அதிகபட்ச ஓட்டங்களாகும்.

முதலாவது போட்டியில், 10 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த சுரங்க லக்மால், இப்போட்டியில் 8 ஓவர்களில் 71 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து, விக்கெட் எதனையும் கைப்பற்றியிருக்கவில்லை.

மாபெரும் இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 251 ஓட்டங்களைப் பெற்று, 141 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இலங்கையின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 132 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ஓட்டங்களைப் பெற்று ஆறுதலளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .