2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிறுமி உயிரிழப்பு; சுயாதீன விசாரணையை முன்னெடுக்குமாறு பணிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 14 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, மயிலம்பாவெளி, காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில், 07 வயதுச் சிறுமியொருவர் வீழ்ந்து உயிரிழந்தமை தொடர்பில், சுயாதீன விசாரணையை முன்னெடுக்குமாறு, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருக்கு உத்தரவிட்ட வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச, தனது அமைச்சின் மூலமும் இது குறித்த விசாரணையை நடத்தப்போவதாகவும் தெரிவித்தார். 

மயிலம்பாவெளியில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தைத் திறந்துவைத்த அமைச்சர், குறித்த சிறுமியின் இல்லத்துக்கும் சென்று சிறுமியின் பெற்றோரிடம் உரையாடினார். 

இதன்போது கருத்துத் தெரிவித்த குறித்த சிறுமியின் உறவினர்கள், குறித்த குழியானது, மண் கொள்ளையிடுவதற்கு அமைக்கப்பட்டதாகவும் அக்குழியில் இருந்து மண்ணைக் கொண்டுசெல்வதிலேயே, குளத்தை நிர்மாணம் செய்தவர்கள் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டினர். 

குளம் நிர்மாணம் செய்தவர்கள், எந்தவிதப் பாதுகாப்பு ஏற்பாடையும் செய்யாமல் நடந்ததாகவும் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். 

தமது பிள்ளையின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென, பெற்றோர் இதன்போது அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர். 

இதனையடுத்து, அதிகாரிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த அமைச்சர், மேற்படி சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.  

குறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் முறையான விசாரணை செய்யப்பட்டு, அதற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுமென, அமைச்சர் தெரிவித்தார். 

மட்டக்களப்பு, திருச்செந்தூரைச் சேர்ந்த அனுரஞ்சித் அனுசிரா (வயது 7) என்ற சிறுமி, காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் வீழ்ந்து, கடந்த புதன்கிழமை உயிரிழந்தார்.  

மயிலம்பாவெளி - காமாட்சி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டத்தின் ஒரு பகுதியில், தாமரைத் தடாகம் அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .