2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ் மக்களுக்கான ’தீர்வு கிடைக்குமென நம்பிக்கை’

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 மே 21 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் மனோ தெரிவிப்பு
4. வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டாமெனவில்லை
4. உள்நாட்டில் சரியான நீதிக்கட்டமைப்பு வேண்டும்
4. வடக்கு - கிழக்கு இணைக்கப்பட வேண்டும்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, இந்த அரசாங்கக் காலத்தில் கிடைக்குமென்ற நம்பிக்கை தனக்குண்டு என, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் இன்று (21) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “நாளை, நாளை மறுநாள் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம் என்றாவது ஒருநாள், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.இந்த நாட்டின் தேசிய இனப் பிரச்சினை தீரும் என்று நம்புகின்றேன். அந்தக் கனவு, என்றாவது ஒரு நாள் நனவாகும்" என்று அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு, போர்க்குற்ற விசாரணை நடத்தத் தேவையில்லை என, தான் ஒரு போதும் கூறவில்லை எனத் தெரிவித்த அவர், தனது கருத்து, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனவும், வேண்டுமென்று சிலரால் திரிபுபடுத்தி, மக்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார்.

“பிரதேசத்துக்கு பிரதேசம், மொழிக்கு மொழி, மாறி மாறிப் பேசுபவன் நானல்ல.
“1988, 1989ஆம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் பெரும்பான்மையின இளைஞர்கள் கொல்லப்பட்ட போது, அந்தக் கொலைகளுக்கெதிராக முதன்முறையாக ஐக்கிய நாடுகள், ஜெனீவா வரை சென்றவர்கள், மஹிந்த ராஜபக்‌ஷ, வாசுதேவ நாணயக்கார போன்றோராவர். அவர்கள் சென்றதைச் சரியானது என்று, அன்று நான் சொன்னேன்.

“உள்நாட்டில் தீர்வில்லை, நீதியில்லை, நியாயமில்லை என்றும், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துதான் அந்தப் பிரச்சினைகளை வெளிநாட்டுக்குக் கொண்டு சென்றனர்.
“அதேபோல இன்றும் தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால்தான், ஐக்கிய நாடுகள் வரை சென்றுள்ளனர்.

“ஆகவே, ஐக்கிய நாடுகள் செல்ல வேண்டாம் என்று கூறுவார்களானால், உள்நாட்டில் சரியான நீதிக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றே நான் கூறியிருந்தேன்" என்று குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், இரு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டுமென்பதே தனது கருத்தெனவும், அவ்விணைப்புக்கு, கிழக்கு மாகாணத்தில் வாழக்கூடிய மக்களும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

“எனினும், கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் சமமாக வாழ்கின்றார்கள். வடக்கு, கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணத்திலிருக்கின்ற மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கின்றதா, இல்லையா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்காக ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தில், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் மனோ, “தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற வகையிலே, இனப் பதற்றம், இனச் சிக்கல், பிரிவினை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் காரணங்கள் தோன்றக் கூடாது என விரும்புகின்றேன்” என மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .