2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தவறான புரிதல்களே மக்களிடையே முரண்பாடு

Editorial   / 2019 ஜூலை 21 , பி.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

கடந்த காலத்தில் முஸ்லிம், தமிழ் மக்கள் தொடர்பில் கொண்டிந்த தவறான புரிதல்களே தமிழ்-முஸ்லிம் மக்களிடையே முரண்பாடு தோன்றுவதற்கு காரணமாக அமைந்ததாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

முன்னைய காலத்தில் முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்றே அழைத்துவந்ததாகவும் ஆனால், பின்னர் அவர்கள் தங்களை வேறுபடுத்திகாட்டமுற்பட்ட நிலையிலேயே தமிழ்-முஸ்லிம் மக்கள் பிரியும் நிலையேற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  மகிழுர் கண்ணகிபுரத்தில் நேற்றுமுன்தினம்  மக்கள் சந்திப்பு நடைபெற்றது.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் அறிவுறுத்தும் வகையிலும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையிலும் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதில்   தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்  சீ.வி.விக்னேஸ்வரன்,தமிழ் மக்கள் கூட்டணி கொள்கை பரப்பு செயலாளர் எஸ்.சிற்பரன் உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன்,

  

 ஒரு காலத்தில் மர்ஹும் மசூர் மௌலானா   தமிழரசுக் கட்சியின் முக்கிய நபராக இருந்தவர். தந்தை செல்வாவினுடைய வலது கரம் என்று கூட அவரைக் கூறலாம். அந்தக் காலத்தில் அவருடைய சிந்தனை 'நான் ஒரு தமிழன்' என்றே இருந்தது. தமிழன் என்ற முறையில் தமிழ் மக்களோடு சேர்ந்து அவருடைய காரியங்கள் நடைபெற்றன.

  அந்த காலகட்டத்தில் தான் தமிழ் இளைஞர்கள் போராட ஆரம்பித்தனர். இந்தப் போராட்டத்தில் முதல் சில வருடங்களில் பல முஸ்லிம் இளைஞர்கள் கலந்துகொண்டனர். காலம்செல்லச்செல்ல அவர்களிடையே நாங்கள் ஏன் இவர்களுடன் சேர்ந்து போராடி உயிரைவிடவேண்டும் என்றும் அரசாங்கத்துடன் சேர்ந்து எங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் என்ன என்ற அடிப்படையில் நாங்கள் வித்தியாசமான ஒரு இனம் என அவர்கள் கூறத்தொடங்கியதில் இருந்துதான் தமிழ், முஸ்லிம் மக்களின் உறவில் விரிசல் ஏற்படத்தொடங்கியது.

 இதுவரை காலமும் முஸ்லிம் மக்கள் எங்களுடைய காணிகளை கொள்வனவு செய்தார்கள் அல்லது கபளீகரம் செய்தார்கள். இந்த இரண்டையும் நாங்கள் இனி விடக்கூடாது. எங்களுடைய தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செய்தால் கிழக்கு மாகாணத்தில் நாங்கள் இல்லாது போய்விடுவோம்.வடகிழக்கு இணைப்பு ஏற்பட்டால் முஸ்லிம் மக்களுக்கு ஒரு மாகாணம் தரப்பட வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கூறியதாக  பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு இணைப்பிலே முஸ்லிம்களுக்கு ஒரு அலகு வழங்கப்படவேண்டும் என எங்களுடைய கட்சி ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக்கொண்டிருக்கின்றது. ஆனால், முஸ்லிம் மக்கள் வடக்கு ,கிழக்கு இணைவதற்கு நாங்கள் எப்போதும் இடமளிக்க மாட்டோம் என்பதை கூறிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், இப்பொழுது வடகிழக்கு இணைந்தால் முஸ்லிம்களுக்கு ஒரு மாகாணம் வழங்கப்படவேண்டும் என கூறியிருக்கின்றார். அவர்களுடைய சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டுவருவதை நீங்கள் பார்க்கலாம். வடக்கும் கிழக்கும் இணையவேண்டிய அவசியம் ஏற்படப்போகின்றதோ என அவர்கள் எண்ணுகின்றனர்.

வடக்கு, கிழக்கு இணைந்தால் நாங்களும் தமிழ் மக்களோடு சேர்ந்து ஒரு விடயத்தில் இறங்கலாம், எனவும் பெரும்பான்மை இனத்தை நம்பி மற்றைய சிறுபான்மை இனத்தை நாங்கள் வெறுத்து ஒதுக்கியதன் காரணமாக இன்று பெரும்பான்மை இனத்தினுடைய கோபத்திற்கும் விசமத்தனங்களுக்கும் ஆளாகியிருக்கின்றோம் என்ற சிந்தனை முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களோடு சேர்ந்திருக்காது சிங்கள மக்களோடு சேர்ந்து இயங்கியதால் தான் இன்று கைவிடப்பட்டிருக்கின்றோம் என்ற சிந்தனை இருக்கின்றது எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .