2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தூக்குமேடையைக் காட்டி ‘மக்களைத் திசை திருப்புகின்றார்’

Editorial   / 2018 ஜூலை 30 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தூக்குமேடையைக்காட்டி, மக்களைத் திசைதிருப்பும் செயற்பாடுகளையே மேற்கொண்டுவருகிறார் என, மக்கள் விடுதலை முன்னணியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, பயனியர் வீதியிலுள்ள தனியார் விடுதியில், “நாட்டைப் பாதுகாக்கும் நாட்டைக் கட்டியெழுப்பும் மக்கள் நேயமிகு ஆட்சி” என்னும் தலைப்பில், நேற்று (29) மாலை நடைபெற்ற, மக்கள் விடுதலை முன்னணியின் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்காலச் செயற்பாடுகள், தற்போதைய நிலமைகள் தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு கருத்துப் பகிர்வுகள் நடைபெற்றன.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய விஜித ஹேரத் எம்.பி, “இந்த நாடு, பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. சமூக மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும், நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. வங்கிகள் கொள்ளையிடப்படுகின்றன; போதைப்பொருள் பாவனைகள் அதிகரித்துள்ளன; துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இவை, சமூக நெருக்கடியாக மாறியுள்ளன.

“மக்களுக்கு வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிபொருள், அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரிப்பு என, பல்வேறு சுமைகள் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டார்.

எடுத்த கடன்களை, சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்திருந்தால், இந்த நாடு முன்னேறியிருக்கும் என்றும், ஆனால், எடுக்கப்பட்ட கடன்கள் மிக மோசமான முறையில் வீண்விரயம் செய்யப்பட்டன எனவும், அதனால் கடன்களில் சிக்கித் தவித்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“சீனாவிடம் இருந்து கோடிக்கணக்கான பணத்தைப் பெற்று, விமானம் வராத மத்தல விமான நிலையத்தைக் கட்டினோம். அதனால் எந்தப் பயனையும் நாங்கள் அடையவில்லை. கடந்த காலத்தில் வாங்கப்பட்ட கடன்கள், மிக மோசமான முறையில் வீண் விரயம் செய்யப்பட்டதால், இன்று இந்த நாடு கடனில் சிக்கித் தவித்து வருகிறது" எனக் குறிப்பிட்டார்.

இவற்றுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பையேற்ற தற்போதைய அரசாங்கமும், சேற்றுக்குள் புதையுண்ட வாகனம் போல், முன்னேறிச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறது எனவும், எந்தவித உற்பத்திகளையும் மேற்கொள்ளாமல், நாட்டின் வளங்களை விற்பதிலேயே, அரசாங்கம் ஆர்வமாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .