2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘தெளிவான நிலைப்பாட்டை எடுத்தால் பூரண ஆதரவு’

வடிவேல் சக்திவேல்   / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல் 

இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவான  நிலைப்பாட்டை எடுத்தால், அதற்கு தனது பூரண ஆதரவு வழங்கப்படும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இது தொடர்பில், அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரங்கமாக வெளியிட்டுள்ள குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“அனைத்து முஸ்லிம் தலைமைத்துவங்களையும் இணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். எதிரணியில் இருப்பவர்களை விமர்சித்து எதிர்ப்பதன் மூலம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது.

“வடக்கிலிருந்து கிழக்கு பிரிக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சமூகத்தினரும்  ஒற்றுமையுடன் ஒன்றாக வாழ வேண்டும் என்பதே மறைந்த தலைவர் அஷ்ரப் சேரின் எதிர்பார்ப்பாகும்.

“அதன் அடிப்படையில், பிரிக்கப்பட்டுள்ள வடக்கும் கிழக்கும் மீள இணைக்கப்படுவதற்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது எம்மை தமிழ் சகோதரர்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.

“கிழக்கு மாகாணம் பிரிந்திருக்கும் போது, எமக்கான சகல அதிகாரங்களும் அங்கு கிடைக்கும். மூவின மக்களுக்கும் சம உரிமை இம்மாகாணத்தில் உள்ளது. ஆரம்பத்தில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் முதல்வராக இருந்தார். இப்பொழுது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த, செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் முதல்வராக உள்ளார். எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திலிருந்து ஒருவர் முதல்வராக வரமுடியும். இவ்வாறு மூன்று சமூகத்தினரும் ஒற்றுமையாக சம உரிமைகளைப் பங்கிட்டுக் கொள்வதற்குத் தோதாய் கிழக்கு மாகாணம் உள்ளது.

“நாட்டில் உள்ள 9 மாகாணங்களிலும் கிழக்கு மாகாணத்தில் மாத்திரமே முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சராகவோ, முதல்வராகவோ வர முடியும். வேறு எந்த மாகாணத்திலும் அவ்வாறு வர முடியாது. கிழக்கு மாகாணத்தையும் வடக்குடன் இணைத்தால் முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ வர முடியாது போகும். அவ்வாறான நிலை ஏற்படுமாயின் முஸ்லிம் சமூகம் கணக்கில் எடுபடாத சிறுபான்மை சமூகமாக மாறிவிடுவோம்.

“எனவே, மூன்று இனமும் ஒற்றுமையாக செயற்படக்கூடிய வகையில் கிழக்கு மாகாணம் தனித்து சுயாதீனமாக இயங்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளோம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .