2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’பேதமின்றி, நல்லிணக்க அடிப்படையில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும்’

Editorial   / 2018 மே 14 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன், எம்.எம்.அஹமட் அனாம்

இன, மத பேதமின்றி, நல்லிணக்க அடிப்படையில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுமென, தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹீர் மௌலானா இன்று (14) தெரிவித்தார். யாருக்கும் பாகுபாடு காட்டவோ அல்லது யாரையும் புறக்கணிக்கவோ கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது, புதிய பொறுப்பைப் பெற்றுக் கொண்ட பிரதியமைச்சர், தனது பொறுப்புகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், மற்றும் அரச கரும மொழிகள் எனும் அமைச்சு மூலமாக, பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவித்த அவர், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இச்செயற்பாடுகளுக்காக, மேலதிக நிதியை வழங்குவதாக, ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனக் குறிப்பிட்ட அவர், கிழக்கு மாகாணத்தில் இன நல்லிணக்க வேலைத்திட்டங்களை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைளை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரைக்கும், வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில், வீடமைப்பு மற்றும் வீதி அபிவிருத்தி போன்ற அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

“பிரதேச ரீதியான பாகுபாடு இன, மற்றும் மொழி ரீதியான பாகுபாடுகள் பார்க்கக் கூடாது. இன நல்லிணக்கத்தையும் சமூக ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை, நம் அனைவருக்கும் உண்டு. அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும். எமது அமைச்சு, இதற்கான வேலைத்திட்டங்களையே மேற்கொள்ளும்" என்று குறிப்பிட்டார்.

இலங்கை, பல்லின சமூகங்கள் வாழும் நாடென்பதைச் சுட்டிக்காட்டி அவர், ஒருவரையொருவர் மதித்து, அவரவர் மதத்தையும் மதித்து, நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .