2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் நாளை பேரணி

Editorial   / 2018 மே 29 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

வாகனேரி மற்றும் உறுகாமம் உண்ணிச்சை நீர்பாசன திட்டத்தின் கீழ் விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் உத்தியோகத்தர்களால், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நாளை (30) கண்டனப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும்,“அரச ஊழியர்களை தாக்கிய காடையர்களுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தாமதம் ஏன் ? வன்மையான கண்டிக்கிறோம்” -அரச ஊழியர்கள் என்ற வசனங்கள் அடங்கிய பதாதை மற்றும் கறுப்பு கொடி போன்றன மட்டக்களப்பு பிரதான வீதி ஓட்டமாவடி நீர்பாசன திணைக்கள உப காரியாலய கட்டடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக, உன்னிச்சைக் குளத்தின் வான் கதவுகள், இம்மாதம் 24ஆம் திகதி திறந்து விடப்பட்டன.

இதனால் சடுதியாக உன்னிச்சைக் குளத்தின் நீரேந்துப் பகுதிக்குக் கீழிருந்த விவசாய நிலங்கள், வயல்வாடிகள், வாடிகளிலிருந்த உடமைகள் எல்லாம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், தாம் பாதிக்கப்பட்டதாக, பிரதேச விவசாயிகள் அதிகாரிகளுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

அந்த விவசாயிகள் தம்மைத் தாக்கியதாகவும், நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

திடீரென வான் கதவுகளை முழுமையாகத் திறந்து விடாது, கட்டம் கட்டமாகத் திறந்து விடப்பட்டிருந்தால், தாம் அடித்துச் செல்லும் மடை திறந்த நீரால் பாதிப்பைச் சந்திந்திருக்க முடியாது என்று விவசாயிகள் வாதிடுகின்றனர்.

அதிகாரிகள் அசமந்தமாக இருந்ததாகவும், விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பாக தற்போதைய வானிலை காரணமாக, மட்டக்களப்பு உன்னிச்சைக்குளம் நிரம்பி வழியும்போது, வான் கதவுகள் திறந்ததால் தாம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, நீர்ப்பாசன அதிகாரிகளைத் தாக்கினர் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில், உன்னிச்சைப் பிரதேச விவசாயிகள் இருவர், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதவானும் ஏறாவூர் சுற்லா நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி முன்னிலையில், ஞாயிற்றுக்கிழமை (27) ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதிகாரிகளைத் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்களான விவசாயிகளை, பிணையில் விடுவித்த நீதவான், வழக்கை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

இச்சம்பவத்தைக் கண்டித்தே, இந்த கண்டனப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .