2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முன்பள்ளிக் காணியை மீட்க உண்ணாவிரதப் போராட்டம்

Editorial   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் ஒரு சிலரால் தமது முன்பள்ளி அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்டுத்தருமாறும் கோரி, உண்ணாவிரதப் போராட்டமொன்று, மட்டக்களப்பு மாவட்ட செயலகம் முன்பாக இன்று (03) நடத்தப்பட்டது.

தமது முன்பள்ளிக்குரிய காணி, கட்டடத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில், “துரோகத்துக்கு எதிரான போராட்டம்” எனும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், அஸ்ஸக்றா முன்பள்ளியின் தலைவர் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

காத்தான்குடி, அஸ்ஸக்றா முன்பள்ளியின் காணி, கட்டடம் ஆகியன 2014ஆம் ஆண்டு தம்மிடமிருந்து அபகரிக்கப்பட்ட நிலையில், தாங்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் குறித்த முன்பள்ளியை வேறு இடத்தில் நடத்திவருவதாக, முன்பள்ளியின் தலைவர் எம்.எல்.ஏ.அஸீஸ் தெரிவித்தார்.

கடந்த 19 வருடமாக இந்த முன்பள்ளியை தாம் நடத்திவந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அடிவருடிகள், காத்தான்குடி பிரதேச செயலகத்திலுள்ள சிலரின் உதவியுடன் குறித்த காணியையும் கட்டடத்தையும் அபகரித்தாகவும் அதனை மீட்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் முடியாமல்போனதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், காணியை மீட்டுத்தருமாறு தாம் காத்தான்குடி பிரதேச செயலகத்திடம் பலமுறை கோரியபோதிலும் அவர்கள் பக்கச்சார்பான முறையிலேயே செயற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது அங்குவந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகக் காணிக்குப் பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்சினி முகுந்தன், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்.

இதனடிப்படையில், எதிர்வரும் 14ஆம் திகதிக்கு இடையில் குறித்த முன்பள்ளி தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதாக அவர் வழங்கிய உறுதிமொழியையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .