2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் இளைஞன் பலி; சிறுவன் உட்பட மூவர் படுகாயம்

Editorial   / 2018 ஜூலை 16 , பி.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், நடராஜன் ஹரன்

அதி வேகமாகப் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் மூன்று, ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில், ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பலியானதோடு, சிறுவன் உட்பட மூவர், கை, கால்கள் உடைந்த நிலையில், படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - கொழும்பு நெடுஞ்சாலை புணானைப் பகுதியில், நேற்று (15) இரவு 7.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது,

ஏறாவூர், மீராகேணி அஹமட் பரீட் விளையாட்டுக் கழக இளைஞர்கள் 6 பேர், கல்லால்லைக்கு விளையாட்டு நிகழ்வொன்றுக்காகச் சென்று, 3 மோட்டார் சைக்கிள்களில் ஏறாவூர் திரும்பிக் கொண்டிருந்தபோதே, விபத்துச் சம்பவித்துள்ளது.

குறித்த இளைஞர்கள், காட்டு யானைகள் கடக்கும் புணானைக்கும் நாவலடிக்கும் இடைப்பட்ட புதர்ப் பகுதிகளைத் தாண்டிச் செல்லும்போது, ஒன்றன்பின் ஒன்றாக மோட்டார் சைக்கிள்களை அதிவேகமாகச் செலுத்தியுள்ளனர்.

அப்போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள்கள் மூன்றும், ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்தில் சிக்கியுள்ளன.

அதில் மோட்டார் சைக்கிளொன்றின் பின்னால் அமர்ந்து வந்துகொண்டிருந்த ஏறாவூர் போக்கர் வீதியை அண்டி வசிக்கும் லாபீர் ஹில்மி (வயது 22) என்பவர் மரணமடைந்தார்.

மேலும் மூவர் கை, கால்கள் உடைந்த நிலையில், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஏறாவூரைச் சேர்ந்தவர்களான மஹ்றூப் அறபாத் (வயது 28), இஸ்மாயில் நிம்ஜாத் (வயது 34), அப்துல் காதர் முஹம்மது அமான் (வயது 15) ஆகியோரே படுகாயமடைந்தவர்களாவர்.

மரணமடைந்தவரின் சடலம், உடற்கூறாய்வுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதெனத் தெரிவித்த பொலிஸார், சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .