2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு மாகாண அமைச்சர் வாழ்த்து

Editorial   / 2018 ஜூலை 26 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

தமிழ்மொழித் தின போட்டியின் தேசிய மட்ட நாட்டார் பாடல் போட்டியில், பொ/கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயம் 2ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டமைக்காக, மத்திய மாகாண கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன், வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தமிழ்தின போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதனூடாக, கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயம், மத்திய மாகாணக் கல்வி அமைச்சுக்கும் ஹட்டன் வலய கல்விப் பணிமனைக்கும் பெருமை சேர்த்துள்ளது என, அமைச்சர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“போட்டியில் பங்குபற்றிய மாணவர்களுக்கும், நாட்டார் பாடலைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வித்தியாலயத்தின் அதிபருக்கும், எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மாணவர்கள், கல்வியில் மட்டுமன்றி, கலைத்துறையிலும் சாதனை படைக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், இதற்கு கெம்பியன் பாடசாலை, ஓர் உதாரணமாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
இந்தப் பாடசாலையை, ஏனைய பாடசாலைகளும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, இம்முறை ஹட்டன் கல்வி வலயம், கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளமையைச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களும், சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு, மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பாடசாலைகளுக்குத் தேவையான வளங்களை மட்டுமே தம்மால் பெற்றுக்கொடுக்க முடியும் என்று தெரிவித்த அவர், அந்த வளங்களைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்த வேண்டிய கடமை, பாடசாலைகளின் அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ளது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .