2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’சம்பளப் பேச்சுவார்த்தை இனி நடைபெறாது’

Editorial   / 2020 ஜூன் 30 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் எனவே, பெரும்பாலும் இம்முறை நடைபெறும் சம்பளப் பேச்சுவார்த்தையே, இறுதிப் பேச்சுவார்த்தையாக இருக்கும் என, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஊடாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டியில், இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சுமையைக் கருத்தில் கொண்டே, இந்த 1,000 ரூபாய் கோரிக்கை முன்வைக்கப்பட்டது என்றும் இறுதியாக இது தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிகரமாகவே முடிவடைந்தது என்றும் தெரிவித்தார்.

தொழிற்சங்கத்துறையில் அனுபவம் இல்லாதவர்களே, விமர்சனங்களை முன்வைத்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாகிவிடுவார் என்பதால், இனியும் சம்பள உயர்வு தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படமாட்டாது என தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, கடந்த காலங்களில் மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில், 90 சதவீதமானவை, முறையற்ற விதத்திலேயே நிர்மாணிக்கப்பட்டன என்றும் இவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாக, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், கண்டி மாவட்டத்துக்கு அதிக வீடுகளைத் தருமாறு கோரியுள்ளதாகவும் மலையக எழுச்சி திட்டத்தின் கீழ். ஏற்கெனவே 1,500 வீடுகளை அமைக்க அடித்தளம் இடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .