2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சுகயீனவிடுமுறை போராட்டத்துக்கு அழைப்பு

Editorial   / 2019 மார்ச் 11 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ சண்முகநாதன்

அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு, அராசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நாளை (13), சுகயீன விடுமுறைப் போராட்டத்தை நடத்துவதற்கு, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.  

இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, சகல அதிபர், ஆசிரியர்களுக்கும் இலங்கை கல்விச் சமூக சம்மேளன அழைப்பு விடுத்துள்ளது.  

இது தொடர்பில், மேற்படிச் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஆர்.சங்கரமணிவண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,   

1997ஆம் ஆண்டு முதல்,’பி.சி. பெரேரா ஆணைக்குழு ஆசிரியர் , அதிபர் சம்பளத் திட்டம்’ அமுலில் இருந்து வருவதாகவும் அதில் காணப்படும் முரண்பாடுகளை, இதுவரை பதவியில் இருந்த எந்தவோர் அரசாங்கமும் தீர்த்து வைக்க முன்வரவில்லை என்றும் சாடியுள்ளதுடன், அரச சேவைகளில் அடிமட்டத்துக்கு ஆசிரிய சேவை தள்ளப்பட்டுள்ளதென்றும் விமர்சித்துள்ளார்.  

உலக நாடுகளில், ஆசிரியர்கள் பெறும் சம்பளத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகவும் குறைவான சம்பளம் பெறுபவர்களாக இலங்கை ஆசிரிய சேவையில் உள்ள ஆசிரியர்களே உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.   

கல்வியமைச்சின் 6/2006 சுற்றறிக்கையின் மூலம், காலனித்துவ முறைக்கு ஏற்ப ஆசிரியர்-அதிபர் சேவையின் பதவிநிலை பிரிக்கப்பட்டு, இரண்டாம் மட்டத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதென்றும் 1997ஆம் ஆண்டுக்குப் பின்னர், பல சுற்றறிக்கைகள் வெளிவந்துள்ள போதிலும், சம்பளப் பிரசினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளதுடன் பி.சி. பெரேரா சம்பள ஆணைக்குழுவால் உருவாக்கப்பட்ட சம்பள முரண்பாட்டை 6/2006 சுற்றறிக்கை மேலும் மோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளதென்றும் சாடியுள்ளார். 

2007, 2008ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் வினாத் தாள்களை திருத்தும் பணியைப் புறக்கணித்தும்தொடர்ந்து பல்வேறு போராட்டங்களின் மூலம் அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து வந்ததாகவும் எனவே, 2018 இல் அதி விஷேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, விசேட சம்பள ஆணைக்குழுவை உருவாக்கினர் என்றும் சுட்டிக்காட்டிய அவர், அதற்கு ஆசிரிய சங்கங்கள், தனித்தும் ஒன்றிணைந்தும் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன என்றும் குறிப்பிட்டார்.  

எனினும், இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அதன் காரணமாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், நாளைய தினம் (13) சுகவீன விடுமுறைப் போராட்டத்தை நடத்துவதற்கு, ஆசிரியத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அதில் கலந்துகொள்ள இலங்கை கல்விச் சமூக சம்மேளம் பூரண ஆதரவை வழங்க முன்வந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளதுடன், எனவே, சகல அதிபர்கள், ஆசிரியர்களையும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அதன் பொதுச் செயலாளர் சங்கரமணிவண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .