2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தனி வீடுகளில் வாழ தடைகள் தகர்த்தெறிய வேண்டும்

Editorial   / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆ.ரமேஸ்

மலையக  பெருந்தோட்ட மக்கள், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்துவரும், லயன் வீடுகள் தகர்த்தெறிந்து, சொந்தக்காணியில் தனித்தனி வீடுகளில் வாழ்வதற்கான சூழல் ஏற்படவேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில், லயத்தை விட்டு வெளியேற மாட்டோமென்று, தனிவீட்டு கிராமம் உருவாக்கப்பட்டுள்ள, ஊட்டுவெள்ளி சின்னதோட்ட மக்கள் சிலர் அடம்பிடிப்பது, பொருத்தமற்ற விடயமாகும் என, ஈரோஸ் ஜனநாயக முன்னணியின், மலையக பிராந்திய பொறுப்பாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன், நேற்று (18), வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இவ்விடயம் தொடர்பில் தனதறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “மலையக பெருந்தோட்ட பகுதிகளில், கல்வி  மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு, மிகப்பெரும் தடையாகவும், பெரும்பாதிப்பாகவும், இந்த லயத்து வாழ்க்கை முறை விளங்குகின்றது. மலையக மக்கள், நிலவுடைமையுடன் சொந்தவீட்டில் வாழவேண்டுமென்ற கோரிக்கை, சமூகபற்றாளர்களால் மிக நீண்டகாலமாகவே முன்வைக்கப்பட்டு வருகின்றன.

“அந்த வகையில் அமரர் சந்திரசேகரனால், முதன் முதலில் பெருந்தோட்டங்களில் தனி வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அவரின் மறைவுக்கு பின் பல வருடமாக கிடப்பில் போடப்பட்ட தனி வீட்டு திட்டம், புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால், தற்போது மீண்டும்  முன்னெடுக்கப்படுகின்றது.

“அதில் ஒரு கட்டமாக, அக்கரைப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில், வெள்ளைக்கார காலத்து லயங்கள் தகர்க்கப்பட வேண்டும். அதன் தோட்டத்தில் சகலருக்கும் தனித்தனி வீடமைத்து, அத்தோட்டத்தை கிராமமயப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

“அதற்கு எதிராக சிலர், லயங்களிலிருந்து வெளியேற மறுப்பதாக, ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இது மலையக பெருந்தோட்ட மக்களின் சமூக மாற்றத்தில், அக்கறையுடன் செயற்படும் தரப்பினரை, விசனம் அடைய செய்துள்ளது.

“ஆகவே, மக்கள் அரசியல் சூழ்ச்சிகளுக்கு பலியாகாமல், தோட்டங்களை கிராமங்களாக மாற்றுவதற்கும், லயங்களை தகர்தெறிந்து, அடிமை சின்னங்களை அகற்றவும், ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

“அதே போல், இந்த கிராம மயப்படுத்தும் திட்டத்தினால், அங்கு வாழும் மக்கள், நூற்றாண்டு காலமாக பயன்படுத்தும் வீட்டுத்தோட்டங்கள், கால்நடைவளர்ப்பு மற்றும் புற்காணிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுவிடும் என்ற அச்சம் தோன்றும்.

“அதேவேளை  இந்த மக்களின் நியாயமான அச்சத்தை போக்க வேண்டியது, சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும்” என்றும் அவரின் அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .