2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தொழிலாளர்களின் சந்தா விவரம் வெளியானது; ‘தொழிற்சங்கங்கள் மறுப்பு’

Editorial   / 2019 மார்ச் 20 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

 

மலையகத்தை மய்யமாகக் கொண்டு இயங்கிவரும் தொழிற்சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான ரூபாய்களை சந்தாவாகப் பெற்றுக்கொள்வது தொடர்பான விவரம்  வெளியாகியுள்ளது.

இதற்கமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 7.77 மில்லியன்  (77,751,933) ரூபாயையும் அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் 3.45 மில்லியன் ரூபாயையும் (34,524,328.41), இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் 2.2 மில்லியன்  (22,437,558.53), ரூபாவையும் தொழிலாளர்களிடமிருந்து சந்தாப்பணமாகப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மலையகத்தின் பிரதான ஆறு தொழிற்சங்கங்கள் பெற்றுக்கொள்ளும் சந்தாப் பணம் தொடர்பான தகவல்களை, மாற்றம் என்ற இணையத்தளம்,  தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெற்றுக்கொண்டுள்ள தகவல்களிலேயே, மேலதிக தொழில் ஆணையாளர் அதிபதி சி.என்.விதானாச்சி இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இ.தொ.காவுக்கு 3 இலட்சத்து 83 ஆயிரத்து ஏழு பேரும் இ.தே.தோ.தொ சங்கத்துக்கு ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 242 பேரும், தொ.​தே.சங்கத்துக்கு 21 ஆயிரத்து 280 பேரும் கடந்த 2017ஆம் ஆண்டு அங்கத்தவர்களாகப் பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இ.தொ.காவின் அங்கத்தினர் தொடர்பில் வினவியபோது, மூன்று இலட்சத்துக்கும் அதிகமான அங்கத்தினர், தமக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிக் காரியதரிசி மருதபாண்டி ராமேஸ்வரன், இது தொடர்பில் ஆராய்ந்து பதிலளிப்பதாகவும், தங்களுடைய தொழிற்சங்கத்துக்கு மேற்குறிப்பிட்ட தொகை சந்தாப்பணமாகக் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

தொழிலாளர் தேசிய சங்கம் மாதம் 25 ரூபாயை சந்தாப்பணமாக அறவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது தவறெனத் தெரிவித்துள்ள அச்சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளர் சோ.சிறிதரன், கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைவிட குறைவான தொகையே தொழிலாளர்கள் சந்தாவாகச் செலுத்துவதாகவும் கூறினார்.

சந்தாப் பணம் தொழிலாளர்கள் விரும்பித் தருவதெனத் தெரிவித்த அவர், இந்தப் பணம் மீள தொழிலாளர்களுக்காகவே செலவிடப்பட்டு வருவதாகவும் எடுத்துரைத்ததோடு, எந்தவொரு தொழிற்சங்கத்துக்கும் நிலையான அங்கத்தினர் கிடையாதெனவும், இந்த எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்படும் எனவும் கூறினார்.

தொழில் திணைக்களம் வழங்கியுள்ள தகவல்களை ஏற்றுக்கொள்ளும் வகையில்சி வேலாயுதம் ருத்திரதீபன், தங்களது தொழிற்சங்கத்துக்கு 75 - 166 ரூபாயையே சந்தாப் பணமாக தொழிலாளர்கள் செலுத்தி வருவதாகவும், தொழில் திணைக்களத்துடன் இது தொடர்பில் உடனடியாக கலந்துரையாடி சரியான தகவல்களை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

இதேவேளை, மலையக மக்கள் முன்னணி, இலங்கைச் செங்கொடிச் சங்கம், தோட்டத் தொழிலாளர் கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்களின் சந்தாப் பணம் தொடர்பான தகவல்களை, தொழில் திணைக்களம் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தமைக்கு எதிராக, தகவலறியும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக ‘மாற்றம்’ ஆசிரியர் செல்வராஜா ராஜேசேகர் தெரிவித்தார்.

இந்தத் தகவலைப் பெற்றுக்கொள்ள நான்கு மாதங்கள் காத்திருந்ததாக மேலும் தெரிவித்த அவர், தொழில் திணைக்களம் வழங்கிய தகவல்கள் சில தெளிவற்றிருப்பதாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .