2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாடசாலை கட்டடத் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் அதிருப்தி

Kogilavani   / 2017 நவம்பர் 16 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

“ஹட்டன், செனன் பாடசாலையின் அதிபர், கட்சி அரசியல் சார்ந்து செயற்படுகிறார்” என, மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“மத்திய மாகாணக் கல்வியமைச்சின் நிதியொதுக்கீட்டின் கீழ், ஹட்டன் செனன் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதியக் கட்டடத்தின் திறப்பு விழாவுக்கு, குறிப்பிட்ட கட்சியொன்றுக்கு மாத்திரம் முக்கியத்துவம் வழங்கும் வகையில், அரசியல் ரீதியாகச் செயற்படுகின்ற இந்தப் பாடசாலையின் அதிபர் தொடர்பில், மாகாண முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“மத்திய மாகாணக் கல்வியமைச்சின் நிதியொதுக்கீட்டில், ஹட்டன் செனன் பாடசாலைக்கு கட்டடமொன்று நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடத் திறப்பு விழாவுக்கு, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பிரதம அதிதியாகவும் மத்திய மாகாண கல்வியமைச்சர் சிறப்பு அதிதியாகவும் அழைக்கப்பட்டுள்ளனரென, அறிந்துகொண்டேன்.

“இந்நிகழ்வு தொடர்பிலான எவ்வித அழைப்பும், மத்திய மாகாண சபையின் தமிழ் உறுப்பினர்களுக்கு விடுக்கப்படவில்லை. மத்திய மாகாணக் கல்வியமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டடங்களின் திறப்பு விழாக்களுக்கு, மாகாணசபை உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என, மாகாண முதலமைச்சர் பலமுறை அறிவுறுத்தியுள்ளார்.

“எனினும் இதனை மீறியே சில அதிகாரிகளும் அதிபர்களும் செயற்படுகின்றனர். அவ்வாறானதொரு செயலில் செனன் பாடசாலை அதிபரும் ஈடுபட்டுள்ளார்.

“ஹட்டன் செனன் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானோர், தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில், பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு, எனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளேன்.

“தமது பதவியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக, அதிபர்கள் அரசியல் ரீதியாகச் செயற்படுவார்களேயானால், அவர்களுக்கெதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .