2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’போராடியே பெறவேண்டியுள்ளது’

Editorial   / 2018 செப்டெம்பர் 24 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், எஸ்.சதீஸ்

தோட்டத் தொழிலாளர்கள், எதைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானாலும், அதைப் போராடியேப் பெற வேண்டியுள்ளதென, கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் தனியார், அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக ஆணைக்குழுக்களை நியமித்து, அதனூடாக சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக எடுக்கும் நடவடிக்கையை, தான் வரவேற்பதாகத் தெரிவித்ததுடன், அதேபோன்று, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள நிர்ணயச் சபையை அமைத்து, தொழிலாளர்களின் வேதன உயர்வுக்கு, நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

தலவாக்கலையில், நேற்று(23) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், ஏனைய துறைகளைச் சேர்ந்தவர்கள், வேதன உயர்வுக்காகப் போராட்டம் செய்யும் போது, அதற்காகக் குரல் கொடுக்கும் அனைவரும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு, குரல் கொடுக்க முன்வருவதில்லை என்றும் சாடினார்.

நாட்டினுடைய அபிவிருத்தி முதல் ஆட்சியமைப்பது வரை, தோட்டத் தொழிலாளர்களின் பங்களிப்பு உள்ளதெனக் குறிப்பிட்ட அவர், ஆனால், அனைத்து விடயங்களிலும், தொழிலாளர்கள் ஓரங்கட்டப்பட்டே வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார். நல்லாட்சி அரசாங்கம் மட்டுமல்லாது, நாட்டை ஆட்சி செய்த அனைத்து அரசாங்கங்களும், இதனையே பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, இந்த நிலையில் மாற்றம் வேண்டும் என வலியுறுத்திய அவர், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, வேதன உயர்வுக்காகப் போராட வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டதுடன், ஏனையவர்களுக்கு எத்தகைய நடைமுறை உள்ளதோ, அதே நடைமுறையை, தொழிலாளர்களின் விடயத்திலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .