2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வீடுகளைத் திருத்துவதற்கு விசேட கடன்

Editorial   / 2019 மார்ச் 27 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ், ஸ்ரீ சண்முகநாதன்

தேசிய வீடமைப்பு அமைச்சு, நாடளாவிய ரீதியில் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதோடு, அதற்கான கடன் சேவையையும் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ள நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், வீட்டுத்திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் மக்கள், அதற்கான கடன் சேவையைப் பெற விரும்பினால், தன்னுடன் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.  

தேசிய வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவால், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே பகிரப்பட்ட தேசிய வீடமைப்புக் கடன் விண்ணப்பப் படிவங்கள் குறித்து விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, திலகராஜ் எம்.பி, இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.  

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், பொதுமக்கள் தமது வீடுகளில், திருத்த வேலைகளை செய்துகொள்வதற்காக அல்லது விரிவுபடுத்துவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உதவிகளைக் கேட்டு வருவதைக் கருத்திற்கொண்டு, எம்.பிகளின் ஊடாக அத்தகைய கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வீடமைப்பு அபிவிருத்திக் கடன்களைப் பெற்றுக்கொடுக்க, அமைச்சர் சஜித் பிரேமதாச நடவடிக்கை எடுத்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.  

அந்த வகையில், ஆளும் கட்சி எம்.பிகள் ஒவ்வொருவருக்கும் 300 விண்ணப்பங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன என்றும் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவு அளித்த எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும், இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படடுள்ளன என்றும் குறிப்பிட்டார்.  

அந்தத் திட்டத்தின் பிரகாரம், வீட்டின் சுவர்களுக்கு சாந்து பூசுதல், வீட்டின் தரையை அமைத்தல், தரை ஓடுகளை இடுதல், கதவு யன்னல்களைப் பொருத்துதல், வீட்டின் மின்சார இணைப்பு, நீர் குழாய்களைப் பொருத்துதல், மலசலகூடம் மற்றும் குளியலைறையை நிர்மாணித்தல், யன்னல்களுக்கு கிரில் இடுதல், நிலையான கூரையை இடுதல் போன்ற புனரமைப்புப் பணிகளுக்காக இந்தக் கடன் சேவைப் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது என மேலும் குறிப்பிட்டார்.  

‘சொந்துரு பியச’ என அழைக்கப்படும் இந்த வீடமைப்பு அபிவிருத்திக் கடன்களை, இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றின் ஊடாக பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் இந்தக் கடன்களுக்கான இலகு வட்டிவீதம் மற்றும் இலகு கடன் நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.  

எனினும் விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்துத் தகவல்கள் தொடர்பாகவும் வங்கியும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையும் திருப்தியுறும் பட்சத்திலேயே, குறித்த கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.  

நுவரெலியா மாவட்டத்தின் நகர், நகரை அண்டிய பகுதிகள் மற்றும் கிராமங்களில் வாழும் நடுத்தர குடும்பத்தினர், இந்தக் கடன்களைப் பெற்றுக்கொண்டு, தமது வீடுகளின் திருத்தப்பணிகளை அல்லது விரிவுபடுத்தல்களை மேற்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பபடிவங்களை வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அத்தகையோர், தொழிலாளர் தேசிய முன்னணியின் நுவரெலியா மாவட்டத்தின் தமக்குரிய வட்டார அமைப்பாளர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் ஊடாக, குறித்த விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .