2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘கால நீடிப்பை ஐ.நா முடிவுக்கு கொண்டு வர வேண்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கான கால நீடிப்பை ஐ.நா உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதுடன், இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு சென்று போர்க்குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அத்தனை பேரையும் உடனடியாக விசாரிக்க சர்வதேசம் களத்தில் இறங்க வேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவத்தளபதியின் நியமனம் தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட முக்கிய இராணுவ அதிகாரியான ஷபோந்திர சில்வாவுக்கு தற்போதைய கூட்டு அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியுள்ளது. இந்த நியமனம் நாம் சர்வதேசத்துக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிய மாட்டோம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் துரோகம் செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், இராணுவத் தளபதியின் நியமனமானது தமிழர்களுக்கு மட்டுமல்லாது சர்வேதத்துக்கு எதிரான போர் பிரகடனத்தை கொண்டு வரும் ஓர் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஐ.நா.அலுவலகம் தொடக்கம் பல விசாரணைகள் இடம் பெற்றிருந்தன. அவ்வாறு இடம்பெற்றிருந்த விசாரணைகள் அனைத்திலும், போர்க் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டார் என இனங்காணப்பட்ட ஷபோந்திர சில்வாவுக்கு மைதிரி - ரணில் அரசாங்கம் இராணுவத்தளபதி நியமனத்தை வழங்கியமையை வன்மையாகக் கண்டிக்கின்றோம்” எனவும், அவர் தெரிவித்தார்.

“இலங்கை அரசாங்கத்தின் இந்த மிலேச்சகரமான செயற்பாட்டை செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பங்கு பற்றி கண்டனம் தெரிவிப்பேன். அது மட்டுமல்லாது ஐ.நா ஆணையாளர் மற்றும் பல முக்கியஸ்தர்களைச் சந்தித்து சர்வதேசம் இனியும் இலங்கையை நம்பக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தவுள்ளேன்” எனவும் அவர் கூறினார்.

மேலும், ஐ.நாவால் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட உள்நாட்டு விசாரணை ( கலப்புப்பொறிமுறை) க்கான கால நீடிப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தவுள்ளேன். இனியும் இலங்கை அரசுக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் வழங்காது ஐ.நா.பொதுச்சபை, பாதுகாப்புச் சபைக்கு இலங்கை விடையத்தைக் கொண்டு சென்று இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .