2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சுலக்சனுடைய குடும்பத்தினருக்கு புதிய வீடு

Editorial   / 2017 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன், எஸ்.ஜெகநாதன்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவன் சுலக்சனுடைய குடும்பத்தினருக்கு, வீடு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (22) மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தலைமையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாசியப்பிட்டியில் நடைபெற்றது. 

சண்டிலிப்பாய் - மாசியப்பிட்டியில் வீட்டுக்கான அடிக்கல்லை, மீள்குடியேற்ற அமைச்சர் முன்னிலையில் விஜயகுமார் சுலக்ஸனின் தாயார் நாட்டினார். 

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட மேலதிக (காணி) மாவட்ட செயலாளர் எஸ்.முரளிதரன், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். 

யாழ்ப்பாணம் - குளப்பிட்டி பகுதியில், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்களான கலைப்பீடத்தில் 3ஆம் வருடத்தில் கல்வி கற்கும் கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் (வயது 24) ஆகியோர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். 

குறித்த இரு மாணவர்களின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு, அவர்களின் மரணத்துக்கு நீதி வேண்டும் எனவும் அவர்களின் குடும்பங்களுக்கு தேவையான இழப்பீடுகள் வழங்க வேண்டும் எனவும் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த நிலையில், உயிரிழந்த மாணவர்களில் ஒருவரான சுலக்சனின் குடும்பத்தினருக்கு மீள்குடியேற்ற அமைச்சால், சண்டிலிப்பாய் - மாசியப்பிட்டியில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான காணி வழங்கப்பட்டுள்ளதுடன், 9.5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த வீட்டை இராணுவத்தினரே நிர்மாணிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .