2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

துன்னாலையில் தொடர்கிறது தேடுதல் வேட்டை

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே. மஹா

துன்னாலை, குடத்தனைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாருக்கும் இணைந்து, முன்னெடுத்து வரும் தேடுதல் நடவடிக்கை, நேற்றும் (06) முன்னெடக்கப்பட்டது. 

இதன்போது நேற்றுக் காலை தொடக்கம் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், 10 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்பட்டது.  

துன்னாலை, குடத்தனைப் பகுதியில் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து, நேற்று முன்தினம் (05), அதிகாலை 4 மணி தொடக்கம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் போது, மூவர் கைது செய்யப்பட்டனர். மேலும், உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்து, ஐந்து கன்டர் ரக வாகனங்களும் 9 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பஸ்களில் இரவோடு இரவாக கொண்டு வந்து குவிக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும், இணைந்து துன்னாலைப் பகுதியைச் சுற்றிவளைத்து வீடு, வீடாகச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  

விசேட அதிரடிப்படையினர் மோட்டார் சைக்கிளிலும் அந்தப் பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டிருந்தனர். 

அண்மையில் சட்டவிரோதமாக மணல் அகழச் சென்றவர்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, துன்னாலைப் பகுதியில் அமைந்திருந்த பொலிஸ் காவலரண், பொதுமக்களால் அடித்து நொருக்கப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.  

இதேவேளை, கடலோரப் பாதுகாப்புப் பணியை முடித்துவிட்டு முகாம் திரும்பிய கடற்படையினர் மீது, வல்லிபுரம் மாவடிச் சந்தியில் வைத்து, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தோர் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.​ 

தொடர்ந்து இதன் பின்னர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி விட்டு வீடு திரும்பிய பொலிஸ் உப பொறுப்பதிகாரி, தில்லையம்பல பிள்ளையார் கோவிலடியில் வைத்து, இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.   அதைத் தொடர்ந்து, கம்பூது வெளிப்பகுதியில் பயணம் செய்யும் பொதுமக்களிடம் இருந்து, பணம் பறிக்கும் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தார்கள். மேற்படி சம்பவங்களைத் தொடர்ந்தே, விசேட பொலிஸார் களமிரக்கப்பட்டனர்.  

கைதுசெய்யப்பட்டவர்கள், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் தேடுதலுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .