2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘பதவிகளைப் பெற ஆர்வமாக இருக்கின்றனர்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 07 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், க.அகரன்

“மாகாண மற்றும் நாடாளுமன்றத்தில் கிடைத்த ஆசனங்களை வைத்து தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய தமிழரசுக் கட்சியினர், அதனை விடுத்து, அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதிலும் ஏனைய பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொள்வதிலுமே ஆர்வமாக இருக்கின்றனர்” என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை (05) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்புத் தொடர்பில் ஊடகங்களுக்கு வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

“புதிய அரசியல் யாப்பு, மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் போன்ற பல விடயங்கள் இருக்கையில், அவற்றுக்காகக் கட்சித் தலைவர்கள் கூடிப்பேசுவதை விடுத்து, ஒரு வருட காலமே எஞ்சியுள்ள ஒரு மாகாணசபைக்கு முதலமைச்சரே தான் விரும்பிய அமைச்சர்களைத் தெரிவு செய்யக்கூடிய அதிகாரம் பெற்றிருக்கையில், இத்தகைய ஒரு கூட்டம் அவசியம் என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் கருதவில்லை. இதனால் அந்தக் கூட்டத்தில் பங்குபற்றுவதில்லை என்று முடிவு செய்திருந்தோம்.  

“ஆனால், 5ஆம் திகதி முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அந்தக் கூட்டத்தில் பங்குபற்ற வேண்டிய ஒரு தேவை எமக்கு ஏற்பட்டது.  

“ஏற்கெனவே, இரண்டு அமைச்சர்களை மாற்றிய சூழலில், டெலோவின் சார்பில் நியமிக்கப்பட்ட டெனீஸ்வரனை மாற்றக் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிரசுக் கட்சியின் அமைச்சர் சத்தியலிங்கத்தை மாற்றுவது தொடர்பான ஒரு விடயமே மிகுதியாக இருந்தது. அவரை மாற்றுவதை எதிர்த்து தமிழரசுக் கட்சி காட்டிய கடும்போக்கின் காரணமாக, ஆறு மணிக்குத் தொடங்கிய கூட்டம் 9.30 மணி வரை நீடித்தது.  

“இதில், ஈ.பி.ஆர்.எல்.எவ்வைப் பொறுத்தவரை, முதலமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம், இந்த மாற்றங்கள் தொடர்பில் முதலமைச்சர் முடிவெடுக்க அனுமதிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  

“தமிழரசுக் கட்சியை இணங்க வைப்பதற்கு, நீண்டநேரம் தேவைப்பட்டது. இறுதியில் மாவை சேனாதிராஜாவும் அதனை ஏற்றுக்கொண்டார்.  

“அனந்தி சசிதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அவரை நீக்கி மற்றொருவருக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என்று, தமிழரசுக் கட்சி விரும்புகிறதா என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதுபற்றி திட்டவட்டமாகப் பதில் சொல்லத் தயங்கிய மாவை சேனாதிராஜா, தங்களுக்கு மற்றுமோர் அமைச்சுப் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், நான்கு அமைச்சுப் பதவிகளே இருக்கக்கூடிய ஒரு சூழலில், அவ்வாறு கொடுக்கப்பட்டால் இன்னுமொரு கட்சி பாதிக்கப்படும் என்பதையும் முதலமைச்சர் தெளிவுபடுத்தினார்.  

“தமிழ் மக்களின் நலன்களின் அடிப்படையில் இருந்து புதிய அரசியல் சாசனம், மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டிய சூழலில், அவை எல்லாவற்றையும் ஒதுக்கித்தள்ளி ஓர் அமைச்சுப் பதவிக்காக நீண்டநேரம் வலியுறுத்துவதானது, தமிழரசுக் கட்சி பதவிகளின் மீது கொண்டுள்ள அக்கறையையே வெளிப்படுத்துகிறது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .