2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘மேற்கு நாடுகளின் நலனுக்காகவே, தமிழீழம் மலருமென தெரிவித்தார்’

Editorial   / 2018 பெப்ரவரி 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஐபக்ஷவின் தாமரை மொட்டுச் சின்னத்தில் இருந்து தான், தமிழீழம் மலருமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தமை, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் நலனுக்காகவே” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கNஐந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழிலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிர்ணயத்தைக் கைவிட வேண்டுமென்று தெரிவித்தது. மேலும் யுத்தம் முடிவடைந்ததால் எங்களிடம் பலமில்லை என்றும் தருவதை ஏற்க வேண்டுமென்றும் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

சிங்கக் கொடியை ஏந்துதல், சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளல் போன்றவற்றுடன் சர்வதேசத்தை அனுசரித்து அரசு தருவதைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் செயற்பட்டு வந்தார். இவை எல்லாவற்றுக்கும் மேலாக புதிய அரசமைப்பின் ஊடாக ஒற்றையாட்சியையும் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியலைக் கைவிட்டு, இவ்வாறு ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்ட கூட்டமைப்பின் தலைவர் திடீரென, தாமரை மொட்டிலிருந்து தமிழீழம் மலருமெனக் கூறுவது, தேர்தலில் வடக்கு கிழக்கில் அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு காரணமாகவோ எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தக்க வைக்க வேண்டுமென்றோ அல்ல. மஹிந்த ராஜபக்ஷவின் எழுச்சியூடாக இந்த நாட்டில் வேறு சக்திகளுக்கு இடமளிக்க கூடாது என்பதுக்காகவே ஆகும்.

ஏனெனில் மஹிந்த, சீன சார்புக் கொள்கையை கொண்டிருப்பதால் பூகோள அரசியல் போட்டி காரணமாகவே ஆட்சி மாற்றமொன்றை இந்தியா மற்றும் மேற்கு நாடுகள் இணைந்து கொண்டுவந்திருந்தன. இவ்வாறான நிலையில், மஹிந்தவின் மீளெழுச்சியை, இலங்கைத் தீவின் பூகோளப் போட்டி காரணமாக, இந்தியா மற்றும் மேற்கு நாடுகள் விரும்பவில்லை.

இந்த மேற்கு நாடுகளின் நலனடிப்படையில் நின்று கொண்டே அவர், நாட்டைப் பிளவுபடுத்த வேண்டாமென்றும் தாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கியிருப்பதால் நாட்டை பிளவுபடுத்த தேவையில்லை என்றும் கூறியிருக்கின்றார். இவை தமிழினம் சார்ந்த செயற்பாடாக இருக்கவில்லை. இதனை தமிழ் மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதுவரை காலமும் மக்களுக்கு பச்சைப் பொய்களையும் தமிழ்த் தேசிய வாதத்தை நீக்கியதான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வந்த கூட்டமைப்பினர், மேற்கு நாடுகளினது பூகோள அரசியல் போட்டி காரணமாக, தற்போது இவ்வாறான கருத்தை முன்வைத்திருக்கின்றனர். ஆகவே இதனை அனைவரும் புரிந்து கொள்கின்ற அதே வேளையில், தமிழின நலன் சார்ந்த செயற்பாடுகளை; முன்னெடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .