2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

60 சதவீதமான சிறுவர்களி்ன வீடுகளில் இணைய வசதி இல்லை

Editorial   / 2020 ஜூன் 02 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ச.சேகர்

இலங்கையில் இணையப் பாவனை தொடர்பில் LIRNEasia அண்மையில் மேற்கொண்டிருந்த ஆய்வில், 5 – 18 வயது நிரம்பிய சிறுவர்கள் காணப்படும் 60 சதவீதமான வீடுகளில் இணைய வசதி இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இணைய வசதி காணப்படும் 40 சதவீதமான வீடுகளில் 90 சதவீதத்துக்கு அதிகமான இணைப்புகள் மொபைல் வலையமைப்புகளினூடாக திறன் பேசிகளை பயன்படுத்தி பெறப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இணைய வசதி காணப்படும் வீடுகளிலுள்ள மாணவர்களுக்கு ஒன்லைன் ஊடாக வகுப்பறை கல்வி அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வசதி ஒரு சில தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மாத்திரம் வழங்கப்படுகின்றது. இந்த அனுபவமும் நாளொன்றுக்கு சுமார் 1 முதல் 2 மணி நேரங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு மேலதிகமாக சுய கற்றல் ஆவணங்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது.

இந்த ஒன்லைன் வகுப்பு அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாக அமைந்துள்ளதுடன், குறிப்பாக கொழும்பிலுள்ள சில புகழ்பெற்ற பாடசாலைகளில் கூட இந்த முறை இதுவரையில் அறிமுகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் மாணவர்களுக்கு தற்போது ஆசிரியர்களினால் மொபைல் Appகளான WhatsApp மற்றும் Viber ஊடாக குறிப்புகள் மற்றும் ஒப்படைகள் போன்றன வழங்கப்படுகின்றன. இந்நிலையில் குடும்பத்தில் திறன்பேசி ஊடாக மாத்திரம் இணைய இணைப்பை கொண்டிருக்கும் நிலையில், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் அந்த சாதனத்தை பயன்படுத்தி தமக்குரிய குறிப்புகளையும் ஒப்படைகளையும் பெற்றுக் கொள்ள முயல்வது என்பது குடும்பத்தார் மத்தியில் மிகவும் நெருக்கடியான நிலையை தோற்றுவித்துள்ளது. இந்நிலையில் எவ்விதமான இணைய வசதியின்றி காணப்படும் 60 சதவீதமானவர்களுக்கு இந்த வசதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பிராந்தியத்தில் பின்தங்கிய பாடசாலைகள் காணப்படுகின்றன. குறிப்பாக பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து வழமையான பாடசாலை நாட்களில் வாரத்தில் ஒரு நாளைக்கு போஷாக்கு உணவு வழங்கும் முறையை, தாம் நிதி திரட்டி முன்னெடுப்பதாக தெரிவிக்கின்றனர். அந்தளவுக்கு பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் குடும்ப நிலை பின்தங்கியிருப்பதாக அவர்களின் கருத்து அமைந்துள்ளது. இந்நிலையில், போஷாக்கான ஆகாரத்தை கூட தமது பிள்ளைகளுக்கு வழங்க முடியாத நிலையில் காணப்படும் பெற்றோருக்கு, இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கணினி அல்லது திறன்பேசி ஆகியவற்றுடன் அவற்றுக்கான இணைய இணைப்புகளை பெற்றுக் கொடுப்பது என்பது கொவிட்-19 தொற்றுப் பரவலினால் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில் எந்தளவுக்கு கடினமான காரியமாக அமைந்திருக்கும் என்பது ஊகித்துக் கொள்ள முடியும்.

இந்நிலையில் மேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் தமிழ்மொழி மூல பாடசாலை ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு இணையத்தினூடாக Moodle எனும் இலவச ஒன்லைன் கட்டமைப்பினூடாக பாடசாலைக் கல்விச் செயற்பாடுகளை தொடர்வது பற்றிய கருத்தரங்கு ஒன்று கடந்த வாரம் Zoom app ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இணையத்தினூடாக புதிய கற்றல் மற்றும் கற்பித்தலை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது பற்றி ஆராயப்பட்டிருந்ததாகவும், பாடசாலை கல்விக் கட்டமைப்புக்கு அது பொருத்தமானதாக அமைந்திருக்கும் என தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதில் பங்கேற்றிருந்த ஆசிரியர்கள் தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.

இந்நிலையில், இணையத்தை அணுகும் வசதியற்ற பிள்ளைகளுக்கு அந்த வசதியை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை கல்வி அமைச்சும், அரசாங்கமும் இணைந்து செயற்படுத்திவிட்டு, இவ்வாறான திட்டத்தை அமல்ப்படுத்துவதனூடாக அனைத்து மாணவர்களுக்கும் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். இவ்வாறானதொரு திட்டம் இலங்கையில் இதுவரை காலமும் நடைமுறையிலுள்ள பாடசாலைக் கல்வி முறையில் பாரிய மாற்றத்தை அல்லது ஒரு புரட்சியை ஏற்படுத்தும் திட்டமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் குறித்த இணைய கட்டமைப்புகளை அறிமுகம் செய்யும் போது, அல்லது அதனை பின்பற்றுமாறு ஆசிரியர்களை தூண்டும் போது, குறித்த ஆசிரியர்களுக்கு அவற்றை உபயோகிக்கும் முறை தொடர்பான போதிய அறிவை பெற்றுக் கொடுக்க வேண்டியதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும். ஏனெனில் இந்த இணைய செயலிகளை இயக்குவதற்கு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அது தொடர்பான போதிய அடிப்படை அறிவு காணப்பட வேண்டும். மேலும், கற்பித்தல், கற்றல் முன்னெடுக்கும் போது எழும் கோளாறுகள் அல்லது சிக்கல்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ள உதவிகளை பெற்றுக் கொள்ளக்கூடிய தொழில்நுட்ப அணிகள் மும் மொழிகளிலும் பணியாற்றக்கூடிய வகையில் செயலில் இருக்க வேண்டும்.

அத்துடன் பாடசாலை வகுப்பறை சூழலில் கல்வி கற்றுப் பயின்ற மாணவர்களுக்கு, திடீரென ஒன்லைனில் வகுப்பறை அல்லாத தமது வீட்டுச்சூழலில் இருந்தவாறு கல்வியை தொடருமாறு கோருவது என்பது எந்தளவுக்கு சாத்தியமானது என்பதும் ஒரு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. மாணவர்களுக்கு அந்த சூழலுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

இவை அனைத்தையும் செயற்படுத்துவற்கு பெருமளவு நிதித் தொகை தேவைப்படும், குறிப்பாக நாடளாவிய ரீதியில் காணப்படும் பாடசாலைகளில் சுமார் 900 பாடசாலைகளில் மாணவர்களுக்கு கைகளை கழுவிக் கொள்வதற்கான வசதி கூட இல்லை எனவும், தற்போதைய சூழலில், பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு இதுவும் ஒரு சவாலான விடயமாக அமைந்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்த அடிப்படை வசதியை ஏற்படுத்த 300 மில்லியன் ரூபாய் வரை தேவைப்படுவதாகவும், அதனை திரட்டிக் கொள்ள கல்வி அமைச்சுக்கு நெருக்கடியான சூழல் காணப்படுவதாகவும், தனியார் துறையினர் மற்றும் பொது அமைப்புகள் முன்வந்து தன்னார்வ அடிப்படையில் இந்த வசதியை ஏற்படுத்தித் தருமாறும் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அடிப்படைய வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கூட கல்வி அமைச்சு, தனியார் துறை மற்றும் பொது அமைப்புகளின் உதவியை நாடியுள்ள நிலையில், கற்றல் மற்றும் கற்பித்தலில் புரட்சியை ஏற்படுத்தும் இணையப் பொறிமுறைக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு ஏற்படப் போகும் செலவை எவ்வாறு பொறுப்பேற்கும் என்பது ஒரு கேள்விக்குறியாக உள்ளது.

நீண்ட காலமாக நிலவும் இலங்கையின் பாடசாலைக் கல்வி முறையில் மாற்றம் தேவை எனும் கோரலை நிவர்த்தி செய்யும் வகையில், தற்போது எழுந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நீண்ட கால அடிப்படையில் இந்த புதிய இணைய வழிக் கல்விமுறைத் திட்டத்தை நிறுவுவது என்பது கல்வித் துறைக்கு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கும். அத்துடன், இதன் போது கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட சகல மாணவர்களுக்கும் டெப் வழங்கும் திட்டம் தொடர்பிலும் கவனம் செலுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .