2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

COVID-19 பொருளாதார இடரை தணிக்கும் வகையில் விரைவில் எரிபொருள் இறக்குமதி வரி

Editorial   / 2020 மார்ச் 25 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது அமலிலுள்ள எரிபொருள் விலையை தொடர்ந்து பேணும் வகையில், இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் மீது புதிய இறக்குமதி வரி முறைமையை விரைவில் நிதி அமைச்சு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உலகளாவிய ரீதியில் COVID-19 வேகமாக பரவி வரும் நிலையில், சர்வதேச பொருளாதாரங்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் மீது அறவிடப்படும் வரித் தொகை லீற்றர் ஒன்றின் சராசரி விற்பனை விலையில் 57.65 ரூபாயாக அமைந்துள்ளது. இது லீற்றர் ஒன்றின் விற்பனை விலையில் 49 சதவீதமாகும்.

2002 ஜுன் மாதத்தின் பின்னர் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 24.42 அமெரிக்க டொலர்கள் எனும் மிகவும் குறைந்த விலைக்கு வீழ்ச்சியடைந்துள்ள இந்த சூழலில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தீர்மானத்தினூடாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய நிறுவனங்களுக்கு சீரான சந்தைச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடைமுறையாக இந்த தீர்மானம் அமைந்திருக்கும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இலங்கை எரிபொருள் விலையை நிலையாகவும் சீராகவும் பேணி, அதனூடாக 200 பில்லியன் ரூபாய் நிதியமொன்றை கட்டியெழுப்பி, அந்த நிதியைக் கொண்டு இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகிய எதிர்நோக்கியுள்ள பாரிய கடன் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு பயன்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபையினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தப்பட வேண்டியுள்ள பாரிய தொகையில், ஒரு பகுதியை குறைக்கும் வகையில், 50 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும்.

இலங்கை மின்சார சபைக்கு ரூ. 70 க்கு மசகு எண்ணெயை விநியோகிப்பதனூடாக, அனல்மின் உற்பத்தியினால் ஏற்பட்டுள்ள செலவில் ரூ. 30 பில்லியனுக்கும் அதிகமான தொகைக்கான வங்கிக் கடன் மற்றும் வட்டியை இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தினால் செலுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

2018 ஆம் ஆண்டில் இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் ரூ. 100 பில்லியன் இழப்பை பதிவு செய்திருந்தது. இக்கால கட்டத்தில் எரிபொருள் விலைச்சூத்திரம் ஒன்றும் அமலில் இருந்தது. இருந்த போதிலும் பெற்றோலியக்கூட்டுத்தாபனத்துக்கு பாரிய நட்டம் பதிவாகியிருந்தது என அமைச்சரவை பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியின் காரணமாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இலாபகரமான வகையில் செயலாற்ற முடியுமாயின், அதனால் ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை மீளச் செலுத்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், கடன் கட்டமைப்பில் எழுந்துள்ள அழுத்தத்தையும் குறைக்கக்கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .