2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அமானா வங்கியின் வைப்புகளில் முதல் காலாண்டில் வளர்ச்சி

Editorial   / 2020 ஜூன் 20 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020இன் முதலாவது காலாண்டில், அமானா வங்கி சிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. வங்கியின் வாடிக்கையாளர் வைப்புகள் ரூபாய் 5.4 பில்லியனால் அதிகரித்து, ரூபாய் 77 பில்லியன் என்ற நிவையை அடைந்துள்ளது. சவாலான சந்தை நிலைமைகளின் பின்னணியில், கடன் இடர் காப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டதால், முற்பணத் தொகைகள் ஒரு சதவீதம் மாத்திரமே அதிகரித்து, ரூபாய் 58.4 பில்லியனாகக் பதிவு செய்யப்பட்டது.

வாடிக்கையாளர் வைப்புகளில் ஏற்பட்டுள்ள கணிசமான வளர்ச்சி, வங்கியின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் அதிகரிப்பையும் வங்கியின் நட்புறவான வங்கியியல் முறைக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் வரவேற்பையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. மூலோபாய பங்காளித்துவங்கள், கூட்டு முயற்சிகள் மூலம் அதிகமான மக்களைச் சென்றடைவதற்கு வங்கி எடுத்த முயற்சிகளுக்கான பலாபலன்களையும் வைப்புகளின் வளர்ச்சி பிரதிபலிக்கின்றது. நாடெங்கும் 750க்கும் மேற்பட்ட ஸ்தானங்கள் ஊடாக, வைப்புகளைச் சேகரிப்பதற்கு மிகவும் பரந்ததொரு வலையமைப்பை வங்கி கொண்டுள்ளது.

வாடிக்கையாளர் வைப்புகள் அதிகரித்திருப்பதால், வங்கியின் மொத்தச் சொத்துகளும் ரூபாய் 90 பில்லியன் என்ற தொகையைத் தாண்டி, ரூபாய் 91.6 பில்லியனாகக் காணப்படுகின்றது. இதன் பயனாக, வங்கியின் நிகர சொத்துப் பெறுமதி, பங்கொன்றுக்கு ரூபாய் 4.78 என்ற வகையில் முன்னேறியுள்ளது.

நாட்டில் பொருளாதார நிலைமைகளின் சாதகமற்ற தன்மை நீடித்தபோதிலும் அமானா வங்கி, அதன் இலாப உத்வேகத்தை 2020இன் முதலாவது காலாண்டில் தொடர்ந்து பேணியது. வரிக்கு முந்திய இலாபமாகப் பெறப்பட்ட தொகை ரூபாய் 180.2 மில்லியனாகும். 2019இன் முதலாவது காலாண்டுத் தொகையான ரூ. 180.8 மில்லியனுடன் ஒப்பிடுகைளில் இது ஒரு சிறிய அதிகரிப்பு மாத்திரமே.

2019இன் முதலாவது காலாண்டில், வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 129.8 மில்லியன் பெறப்பட்டது. முன்னைய வருடத்தின் இதே காலப்பகுதிக்கான தொகையுடன் ஒப்பிடுகையில் இது மூன்று சதவீத அதிகரிப்பாகும். நடப்பு ஆண்டுக்கென அறிவிக்கப்பட்ட வங்கித் துறை வரி விதிப்பு சீர்திருத்தங்களின் கீழ் வழங்கப்பட்ட சலுகைகளின் அனுகூலத்தையும் வரிக்குப் பிந்திய இலாபம் உள்ளடக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .