2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நாட்டுக்குள் PayPal ஊடாக பணத்தை அனுப்பும் சேவைகளை ஆரம்பிக்க அரசு திட்டம்

Editorial   / 2020 ஜூன் 16 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற 'ஒன்லைன்' பணக் கொடுக்கல் வாங்கல் சேவையான PayPal ஊடாக, இலங்கையர்கள் சர்வதேச ரீதியில் மேற்கொள்ளும் விற்பனைகளுக்கான கொடுப்பனவுகளை, நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை, இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதுவரை காலமும், PayPal ஊடாக இலங்கையிலிருந்து திரட்டும் நிதியை, இலங்கையில் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த வசதி ஏற்படுத்தப்படுவதனூடாக, இலங்கையின் வர்த்தக நாமங்கள், தொழில்முயற்சியாளர்கள், நிறுவனங்களுக்கு e-சந்தைப் பகுதியில் அதிகளவு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இலங்கையர்களுக்குப் பணத்தை உள்நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான அனுமதியை PayPal க்குப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு உள்ளதனூடாக, உள்நாட்டவர்கள் தாம் சர்வதேச ரீதியில் விற்பனை செய்யும் பொருள்கள், சேவைகளுக்கான கொடுப்பனவுகளை, உள்நாட்டு வங்கிக் கணக்கினூடாகப் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி ஏற்படுத்தப்படும்.

இணையத்தள வடிவமைப்பு, கட்டமைப்பு, கிராபிக் டிசைனிங், பல கணினிசார் மென்பொருள் வடிவமைப்புச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இலங்கை இளைஞர் பலர், அண்மையில் பிரதமருடன் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது, தமக்கு வெளிநாடுகளிலிருந்து கொடுப்பனவாகக் கிடைக்கும் பணத்தை, உள்நாட்டில் பெற்றுக் கொள்வதற்குக் காணப்படும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தித் தமக்கு ஆதரவளிக்குமாறு கோரியிருந்தனர்.

தற்போது இலங்கையைச் சேர்ந்த தொழில் முயற்சியாளர் ஒருவர், வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவருக்குச் சேவைகள் எதையும் வழங்கும் சந்தர்ப்பத்தில், அதற்காக மேற்கொள்ளும் கொடுப்பனவை, இலங்கையில் பெற்றுக் கொள்வதற்கான ஒரு பொறிமுறை காணப்படவில்லை.

அத்துடன், தற்போது PayPal ஊடாக, எந்தவொரு பாவனையாளருக்கும் இலங்கையைச் சேர்ந்தவர்களால் பணத்தை அனுப்ப முடிந்த போதிலும், PayPal ஊடாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

இதன் காரணமாக, இணையத்தில் சுயாதீன சேவை வழங்குநர்களாகப் பணியாற்றும் பல இளைஞர்களுக்கு, PayPal ஊடாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதன் காரணமாக, பல வாடிக்கையாளர்கள் இவர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதைத் தவிர்த்து, PayPal ஊடாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் நாடுகளைச் சேர்ந்தவர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தற்போதைய சூழலில், PayPal ஊடாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்துவதனூடாக, நாட்டில், தகவல் தொழில்நுட்பத்தைச் சேர்ந்தவர்கள், பெருமளவு அனுகூலம் பெறுவார்கள் என அறிய முடிகின்றது.

இந்தக் கொடுப்பனவுக் கட்டமைப்பை நிறுவுவது தொடர்பான தேவைகள் குறித்து, அரசாங்கம் கவனம் செலுத்தி, அதனூடாக இலங்கையின் வர்த்தக நாமங்கள், நிறுவனங்களுக்கு அதிகளவு சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் PayPal பிராந்திய அலுவலகத்துடன், இலங்கை மத்திய வங்கி, இது தொடர்பில் ஆராய்ந்த போது, இலங்கையில் சந்தை மிகவும் சிறிதாக காணப்படுவதால், அதற்கு உடனடியாக அனுமதியளிக்க மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சட்ட மூலம் காரணமாக, உள்நாட்டு வியாபாரங்களுக்குச் சர்வதேச இலத்திரனியல் கொடுப்பனவுக் கட்டமைப்புகளான PayPal,  Stripe ஊடாகக் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் வசதி இன்மையால், உள்வரும் e-வணிக விற்பனை நிதி கிடைப்பது, குறைவாக அமைந்துள்ளதாகச் சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் சந்தை, சிறிதாக இருப்பதாகத் தெரிவிக்கப்படும் PayPal இன் கருத்துக்கு மேலாக, நாட்டின் நிதிசார் சட்டங்கள் இறுக்கமாகக் காணப்படுகின்றமை ஒரு பிரச்சினையாக அமைந்திருக்கும் எனவும் கருதப்படுகின்றது. எவ்வாறாயினும், PayPal கோரிக்கை மேற்கொள்ளும் பட்சத்தில், விசேட அனுமதிகளை வழங்க மத்திய வங்கியின் நாணய சபை தயாராக உள்ளதாகவும், தற்போது காணப்படும் நிதிசார் விதிமுறைகளில் PayPal ஊடாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதில், எவ்விதமான சட்ட ரீதியான சிக்கல்களும் இல்லை எனவும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .