2024 மே 08, புதன்கிழமை

நான்கு முதலீட்டு திட்டங்களில் கைச்சாத்து

Editorial   / 2018 நவம்பர் 27 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடைத் தொழிற்றுறை, சரக்கு கையாள்கை, டிஷு உற்பத்தி, பொதியிடல் தொடர்பான நான்கு செயற்றிட்டங்களுடன் தொடர்புடைய முதலீடுகளுக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக, இலங்கை முதலீட்டு சபை அறிவித்துள்ளது.   

ஆடைகள் உற்பத்தி,  இதர துணிவகை உற்பத்திகள் போன்றன ஏற்றுமதி நோக்குடன் உற்பத்தி செய்வதற்கான 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த முதலீட்டுக்கான உடன்படிக்கையில், ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் பேபிவெயார் லங்கா (பிரைவட்) லிமிடெட் உடன் கைச்சாத்திட்டிருந்தது. இந்தத் தொழிற்சாலை பாணந்துறை, மோதரவில தொழிற்துறை எஸ்டேட் பகுதியில் நிறுவப்படும்.  

டபிள்யூ. யு. எஸ். லொஜிஸ்டிக்ஸ் (பிரைவட்) லிமிடெட் உடன் 8,900 மில்லியன் ரூபாய் பெறுமதியான முதலீட்டில் சரக்கு கையாளல் நிலையத் தொகுதி ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

இதில் களஞ்சியசாலை, குளிர வைக்கும் வசதிகள், உள்ளகப் பெறுமதி சேர்க்கப்பட்ட பகுதிகள், பன்னாட்டு சேவைகள், கேட்போர்கூடம், வர்த்தகத் தொடர்பாடல் நிலையம், கண்காட்சி நிலையம், சரக்குக் கையாளல் கல்வியறிவூட்டல் நிலையம், ஆய்வு, அபிவிருத்தி வசதி போன்றன அடங்கியிருக்கும். 

இத்தொகுதி நீர்கொழும்பில் நிறுவப்படவுள்ளதுடன், 402 புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதாக அமைந்திருக்கும்.  

மூன்றாவது திட்டத்துக்கான உடன்படிக்கை, ஜே சி பயோடெக் (பிரைவட்) லிமிடெட் உடன் 500,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியில் ஏற்றுமதி நோக்கிற்காக டிஷு உற்பத்திகள், செயற்கை தாவரங்கள் உற்பத்திகள் போன்றன மேற்கொள்ளும் நிலையமொன்றை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்பட்டிருந்தது.  

வை. சி. ஜி. பகேஜிங் (பிரைவட்) லிமிடெட் உடன் நான்காவது உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஆடைத்தொழிற்றுறையுடன் தொடர்புடைய தயாரிப்புகளை அச்சிடல் செயற்பாடுகளுக்காக கைச்சாத்திடப்பட்டிருந்தது. கையால் பதியும் குறிப்புகள், விலைச் சுட்டிகள், வர்ண பட்டிகள், உடற்பட்டிகள், பிவிசி லேபிள்கள், செடின் லேபிள்கள், அளவு லேபிள்கள், கையேடுகள், பொதியிடல் பெட்டிகள் போன்றன அடங்கியுள்ளன.  

இதனூடாக, 71 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதுடன், 7.6 மில்லியன் டொலர்கள் முதலீட்டில் நிறுவப்படும். இந்நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகள் முன்னணி ஆடை உற்பத்தியாளர்களான பிரான்டிக்ஸ், எம்ஏஎஸ், ஹைட்ராமணி, இதர நிறுவனங்களால் பயன்படுத்தப்படும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X