2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

‘வாகன இறக்குமதி முற்றாக தடை ஏற்றுக் கொள்ள முடியாது’

Editorial   / 2020 மே 19 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகன இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, ஏனைய இறக்குமதி கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

”பற்றுச்சான்றுகள் மீது உயர் எல்லைப் பெறுமதிகளை நிர்ணயித்தல் போன்ற சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பின்னர் அமல்படுத்தப்பட்ட மாற்று வழிமுறைகளை அரசாங்கம் பின்பற்றலாம், மாறாக முற்றாக வாகன இறக்குமதியை தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என” இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்தார்.

நிதி அமைச்சிடம் இது தொடர்பான முறையாக கோரிக்கையை சமர்ப்பிக்க இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பான வெளிநாட்டு ஒதுக்கங்களை பேணுவது தொடர்பான கொள்கையை வாகன இறக்குமதியாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இருந்த போதிலும், அடுத்த மாத இறுதியிலேனும் அரசாங்கம் இந்த தடையை நீக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

”கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, சகல பொருளாதாரங்களும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. தற்போது சகல குடிமக்களின் பிரதான நோக்கம் ஆரோக்கியமான தேசமாகும். இந்த சூழலில், வெளிநாட்டு நாணயம் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுக்க அரசாங்கம் மேற்கொண்டு இந்த திட்டத்தை நாம் நன்கு புரிந்து கொண்டுள்ளோம். முழுமையாக முடக்கப்பட்டு, தற்போது சுமார் இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. மேலும் ஒரு மாதம் பொறுத்திருந்து, திறைசேரி எவ்வாறான திட்டத்தை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளது என்பதை அவதானிக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.” என பீரிஸ் குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், பிரத்தியேக பாவனைக்கான வாகன இறக்குமதி 2018 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த சாதனை மிகுந்த பெறுமதியான 1,574 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், 2019 ஆம் ஆண்டில் 48.2% எனும் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்து 816 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மோட்டார் வாகன இறக்குமதி  ஊக்குவிப்பை தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட கொள்கைகளின் காரணமாக இந்த வீழ்ச்சி கடந்த ஆண்டில் பதிவாகியிருந்தது. 2018 டிசம்பர் மாதம் முதல் தனிப்பட்ட பாவனைக்கான வாகன இறக்குமதி வீழ்ச்சியடைந்திருந்தது.

கடந்த இரண்டு மாத காலமாக வாகனங்கள் விற்பனை சந்தை என்பது ஸ்தம்பித்துள்ளது. ஆயினும் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில், இந்தத் துறை மீட்சிபெறும் என தாம் நம்புவதாக பீரிஸ் மேலும்  தெரிவித்தார்.

”ஊரடங்கு காலப்பகுதியில் விற்பனை எதுவும் இடம்பெறவில்லை. உடனடியாக எமது சங்கத்தின் அங்கத்தவர்களின் விற்பனையில் வீழ்ச்சி காணப்படும். எவ்வாறாயினும், அடுத்த மூன்று மாதங்களில் இந்த துறையும் ஏனைய துறைகளை போன்று எழுச்சி பெறும் என நாம் கருதுகின்றோம்.” என்றார்.

நாட்டிலிருந்து வெளிநாட்டு நாணயம் வெளிச்செல்வதை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளின் காரணமாக, சகல வாகனங்களின் விலைகளும் 10% முதல் 15% இனால் அதிகரித்துள்ளன. ரூபாயின் மதிப்பிறக்கத்தினால் 1000 cc ஐ விட குறைந்த சிறிய ரக வாகனங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.” என பீரிஸ் குறிப்பிட்டார். 

“எதிர்வரும் மாதங்களில் பலரின் முக்கிய குறிக்கோள் வாகனக் கொள்வனவாக இருக்காது, மாறாக தமது பணப்பாய்ச்சலை சீராக்கிக் கொள்வதாக அமைந்திருக்கும். எனவே பலர் சராசரி விலை அதிகரிப்பின் அடிப்படையில் வாகனங்களை விற்பனை செய்வார்கள். ஏற்கனவே இறக்குமதி செய்த வாகனங்களை பழைய விலையில் விற்பனை செய்வதற்கும் பல விற்பனையாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.” என்றார்.

நாட்டில் போதியளவு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் காணப்படுகின்றன. துறைமுகங்களிலிருந்து கடந்த வாரம் பல வாகனங்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்தச் சூழல் பாவித்த வாகனங்களின் விற்பனைக்கு சிறந்த சந்தை வாய்ப்பை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும் என பீரிஸ் கருத்து வெளியிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .