2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விடுதி உரிமையாளர்கள், முகாமையாளர்களுக்குப் பயிற்சி நெறி

Editorial   / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

  -புளியந்தீவு நிருபர்  

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திறன் அபிவிருத்தி அமைச்சின் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான தேர்ச்சித் திட்டத்தின்  (Skills for Inclusive Growth S4IG) அனுசரணையில் சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்கள்  மற்றும் முகாமையாளர்களுக்கான பயிற்சி நெறியின் இரண்டாம் கட்டம் பாசிக்குடா சண் ரே ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்களுக்காக 05 நாட்கள் இந்த பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் ஜனாப்.எம்.எச்.எம்.நளீமின் வழிகாட்டலில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளும் உள்வாங்கப்பட்டிருந்தது.

நடைபெற்ற இரண்டாவது குழு பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 22 சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள்  மற்றும் முகாமையாளர்கள் பங்கேற்றனர். இதேபோன்று எதிர்வரும் மாதங்களில் மேலும் 3 குழு பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்திலுள்ள 96 சுற்றுலா விடுதிகளின் 384 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.குகதாஸ் தெரிவித்தார்.

பயிற்சி நிகழ்வில் உள்வாங்கப்பட்ட  வளர்ச்சிக்கானத் தேர்ச்சித் திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் திருமதி.மரினா உமேஷ் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜெயபாலன் மற்றும் டினேஷ் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்தப் பயிற்சித் திட்டத்தில்  பங்குபற்றிய சுற்றுலாத்துறை விடுதி உரிமையாளர்கள் மற்றும் முகாமையாளர்கள் இப்பயிற்சிகளின் நிறைவில் தங்களது விடுதியில் கடமை புரியும் ஊழியர்களுக்குப் பயிற்சிகளை வழங்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை  வேலைத்தளம், சூழலை சுகாதாரம் மிக்க  பாதுகாப்பானதாக பராமரித்தல், விடுதிகள் குறித்து  நல்லதொரு அபிப்பிராயத்தை  வாடிக்கையாளர் மனதில்  ஏற்படுத்தல், விருந்தோம்பற் குழுவின் அங்கத்தவராக வினைத்திறனுடன் பணியாற்றல், உணவு சம்பந்தப்பட்ட விடயங்களுடன் பணியாற்றுவதாயின் பாதுகாப்பான உணவை வழங்குவதை உறுதிப்படுத்தல் போன்ற விடயங்களில் இத்திட்டத்தில் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .