2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

’இரணைதீவில் காணிகளை அளவிட அனுமதி கிடைக்கவில்லை’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2017 ஒக்டோபர் 11 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிளிநொச்சி இரணைதீவில், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் தங்கி நின்று காணிகளை அடையாளப்படுத்தி அளவீடு செய்வதற்கான அனுமதிகள், பாதுகாப்பு அமைச்சிடமிருந்து இதுவரை கிடைக்கப் பெறவில்லை என பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ். கிருஸ்ணேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலர் பிரிவின் கீழுள்ள மிகவும் கடல் வளம் கொண்ட பிரதேசமான இரணைதீவுப் பிரதேசம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைமாதா நகரில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், தமது சொந்த இடத்தில் மீள்குடியேற அனுமதிக்கக் கோரி, இவ்வாண்டு மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ருவன் விஜேவர்தன, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து, பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை அடையாளப்படுத்தி, அவற்றை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்தது. இந்நிலையில், கடந்த மாதம் பிரதேச செயலர் தலைமையிலான குழுவொன்று இரணைதீவுக்குச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டு வந்தனர்.

இதற்கமைய, நேற்று முன்தினம் (09) இரணைதீவுக்குச் சென்று நிலஅளவை செய்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்பட்டபோதும், இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில், எஸ். கிருஸ்ணேந்திரனை இன்று (11) வினவியபோது, 

“ஏற்கெனவே கடற்படையினர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைவாக இரணைதீவுக்குச்சென்று அங்கு தங்கி நின்று காணிகளை அளவீடு செய்வதுக்கான அனுமதிக் கடிதத்தை மாவட்ட செயலர் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். ஆனால், அதற்கான அனுதிகள் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. அனுமதி கிடைத்தால் பிறிதொரு தினத்தில் அளவீடு செய்யமுடியும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .