2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நொச்சிமோட்டை பகுதியி கிராமத்தவர்களுக்கிடையிலான பிரச்சினைக்கு தீர்வு

க. அகரன்   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில், இரண்டு கிராமத்தவர்களுக்கிடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த முரண்பாடுகளுக்கு சுமூகமாக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

கிராம அலுவலர் தலைமையில், நொச்சிமோட்டை கிராம அலுவலர் அலுவலகத்தில், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் உதயராசா, வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, அப்பகுதி மதகுருமார், ஓமந்தை பொலிஸார், சின்னப்புதுக்குளம் மற்றும் நொச்சிமோட்டை கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் பெண்ணொருவருடன் கதைத்ததாக, புதிய சின்னக்குளத்தைச் சேர்ந்த இளைஞனொருவரை சிலர் தாக்கியதில் குறித்த இளைஞர் காயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த இளைஞனை தாக்கியவர்களுக்கெதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என புதியசின்னக்குளத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், நொச்சிமோட்டை பகுதிக்கு இம்மாதம் ஒன்பதாம் திகதி சென்று கடையொன்றை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கடை உரிமையாளரும் அங்கிருந்தவர்களும் பொலிஸாருக்கு தகவல் வழங்க, அப்பகுதியில் கூடிய புதியசின்னக்குளத்தைச் சேர்ந்தவர்கள் அவ்விடத்தை விட்டு அகன்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக சின்னப்புதுக்குளம் பகுதியைச் இளைஞர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை நொச்சிமோட்டைப் பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சின்னப்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நொச்சிமோட்டை கிராமத்துக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியதுடன் அங்கு நின்றவர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர்.

அந்தவகையில், மூவர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பில் ஓமந்தை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தும் எவரும் கைது செய்யப்படாத நிலையில் இரண்டு கிராமங்களுக்குமிடையில் பதற்ற நிலை நீடித்தது.

இந்நிலையிலேயே, அப்பகுதி மக்கள், கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றை இணைத்து கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதுடன், இனிவரும் காலங்களில் இரண்டு கிராமத்தவர்களும் சண்டையில் ஈடுபடுவதில்லை எனவும் இரண்டு கிராமங்களுக்குள் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டால் மதகுருமார் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாக தீர்வு காண்பது எனவும் முடிவெடுக்கப்பட்டதுடன் இதுவரை இரண்டு கிராமங்களில் நடைபெற்ற வன்முறைகளுக்கும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கபட்டு இரண்டு கிராமத்தவர்களும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .