2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அஞ்சலி செலுத்த வந்த 300 பேர் மெரினாவில் கைது

Princiya Dixci   / 2017 மே 22 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ​சென்னை மெரினா கடற்கரையில் அஞ்சலி செலுத்த வந்த 300 பேரை, தமிழகப் பொலிஸார், நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.  

குறித்த அஞ்சலி நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் மீறி, அஞ்சலி செலுத்தியமையால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனரென, தமிழகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பிறகு, அங்கு போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் பொலிஸார் அனுமதி வழங்குவதில்லை. அங்கு 24 மணி நேரமும் பொலிஸார் கண் காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நினைவஞ்சலி நிகழ்ச்சிக்காகவும் இலங்கை மீது, ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சில தமிழ் அமைப்புகள் மெரினாவில், ஞாயிற்றுக்கிழமை மாலை கூடவுள்ளதாக தகவல் வெளியானது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், மே-17 இயக்கம், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல் வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் மெரினாவில் முள்ளிவாய்க் கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தவும் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், பொலிஸார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி கடற்கரையில் திரண்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன், ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .