2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்திய உடன்படிக்கையை சபைக்கு ஆற்றுப்படுத்துவேன்

Editorial   / 2022 ஜனவரி 21 , மு.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை மிக தெளிவாகவும் முறையாகவும் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி உடன்படிக்கையை சபைப் படுத்துவேன் எனவும்  அமைச்சர் கம்மன்பில  சபையில் வாக்குறுதியளித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் கம்மன்பில மேலும் கூறுகையில்,

இன்றைய நெருக்கடிக்கு கொரோனா காரணம் அல்ல, 1955 ஆம் ஆண்டில் இருந்து கடன்களை பெற்று வருமானத்தை விடவும் அதிகமாக செலவுகளை செய்ததற்கான விளைவுகளையே இன்று நாம் அனுபவித்து வருகின்றோம்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்றால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கும், ஆனால் கொரோனா காரணமாக முன்கூட்டியே நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆகவே இந்த நிலைமைக்கு இதுவரை காலமாக ஆட்சி செய்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக்கூறியாக வேண்டும்.

இப்போது ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இந்த நெருக்கடியில் இருந்து மீள முடியாது. நாம் இன்று நெருக்கடியில் உள்ளோம் என்ற உண்மையை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும், உண்மை கசப்பாக இருந்தாலும் அதனை  எம்மால் நிராகரிக்க முடியாது.

இந்த நாட்டின் உரிமையாளர்கள் மக்களே, எனவே அவர்களுக்கு உண்மையைக் கூறியாக வேண்டும். அதுமட்டுமல்ல நெருக்கடியில் இருந்து மீளும் தேசிய வேலைத்திட்டத்தை உடனடியாக முன்வைக்க வேண்டும். மக்களுக்கு இருட்டில் இருக்க முடியாது. வெளிச்சத்தை நோக்கி மக்கள் பயணிக்கவே எப்போதும் விரும்புவார்கள். எனவே இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த நெருக்கடி இருக்கும் எவ்வளவு காலத்தில் எம்மால் மீள முடியும் என்ற வேலைத்திட்டத்தை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும், திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையம் குறித்து இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்படிக்கை இரகசியமானதென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் குற்றம் சுமத்தினர். ஆனால் இந்த உடன்படிக்கையை செய்துகொள்ள முன்னர் மூன்று தடவைகள் சகல கட்சிகளின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினேன்.

அதுமட்டுமல்ல அமைச்சரவைக்கு தெரியப்படுத்தினேன், பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கும் தெளிவு படுத்தினேன். கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தனியார் தொலைக்காட்சியில் விவாதித்தேன். இதன்போது சகல கேள்விகளுக்கும் நான் தெளிவாக பதில் தெரிவித்துள்ளேன்.

ஊடகங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்தியுள்ளேன். இப்போது கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையை சபைப்படுத்த தயாராகவே உள்ளேன், பெப்ரவரி 8 ஆம் திகதி சபைப்படுத்துவேன். ஆகவே இவ்வாறான தெளிவான முறையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

இதன்போது ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல, “பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டிருந்த வேளையில் ஏன் இந்த உடன்படிக்கையை செய்தீர்கள், பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் நடத்தாது, மூடி மறைத்தது ஏன், இன்றுவரை உடன்படிக்கை சபைப்படுத்தப்படவில்லை ஏன் என்பதற்கு பதில் கூறுங்கள்“ என்றார்,

இதற்கு பதில் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, “தற்போது பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் இடம்பெறுகின்ற காரணத்தினால் எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி இந்த உடன்படிக்கையை சபைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது“ என்றார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .