2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூடப்பட்ட கதவுகளுக்குள்...

J.A. George   / 2022 டிசெம்பர் 11 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 காலப்பகுதியில் நிகழ்ந்த குடும்ப வன்முறைகள் பற்றிய மதிப்பாய்வு!
இந்தக் கட்டுரை சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தின் சார்பாக பிரியதர்சினி சிவராஜாவினால் எழுதப்பட்டது. 

உலகளாவிய ரீதியில் பெண்களுக்கு எதிரான பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளில் குடும்ப வன்முறைகள் முக்கிய இடத்தினை வகிக்கின்றன. உலகம் முழுவதும் சாதாரண சூழ்நிலைகளில் மூன்று பெண்களில் ஒரு பெண் பாலியல் ரீதியில் மற்றும் உடல் ரீதியிலான வன்முறையை தான் நன்கு அறிந்த  ஒருவரால் தனது வாழ்நாளில் எதிர்கொள்வதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அண்மைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.  அதேவேளை நாளாந்தம்  137 பெண்கள்  குடும்ப உறுப்பினர்களின் வன்முறைகளின் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று ஐ.நாவின் பெண்கள் பற்றிய உண்மைகளும் புள்ளிவிபரங்களும் என்ற ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் நிலைமை இவ்வாறிருக்கையில் இலங்கையை எடுத்துக்கொண்டால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 முதல் 70 சதவீதத்தைச் சேர்ந்த பெண்கள் வீட்டு  வன்முறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இலங்கை புள்ளிவிபரத்திணைக்களத்தினால் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும்  எதிரான வன்முறைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட 2019ம் ஆண்டு பெண்களின் நல்வாழ்வு தொடர்பான  ஆய்வுகளின்படி அறிமுகம் இல்லாதவர்களை விட (7.2 சதவீதம்) அறிமுகமானவர்களினால் (17.4 சதவீதம்) அதிக வன்முறைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. 

சாதாரண நிலைமைகளில்  பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளில் அதிகரிப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்ற (எனினும் அதிகம் பேசப்படுவதில்லை) சூழலில் கொவிட் 19 பெருந்தொற்று காலப்பகுதியில் இந்நிலைமையில் மிக வேகமான அதிகரிப்பினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.  அதேநேரம் இவ்விடயம் தொடர்பாக பெண்கள் அமைப்புகளும் இதர சிவில் சமூக அமைப்புகளும் ஆழ்ந்த கவலையினை வெளியிட்;டிருந்தன. கொவிட் பெருந்தோற்றின் காரணமாக நாட்டில் அமுலாகிய  முடக்க நிலை மற்றும் ஊரடங்கு சட்டம் என்பன குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட பெண்களையும், அவ்வாறான சம்பவங்களிலிருந்து மீண்டு வந்து வாழத்துடிக்கின்ற  பெண்களையும் பெரிதும் பாதித்திருந்தது. குற்றமிழைத்தவர்களுடன் ஒரே வீட்டில் எந்தவிதமான உதவி சேவைகளும், ஆதரவும் இன்றி வாழ இந்த துயரமான சூழல் பாதிக்கப்பட்ட பெண்களை  நிர்ப்பந்தித்திருந்தது. 

பெண்கள் உதவி அழைப்பு இலக்கமான 1938 க்கு பொதுவாக வருடாந்தம் 1000 முறைப்பாடுகள் பதிவாகுகின்ற போதிலும்,  கொவிட்; தொற்று முடக்க காலத்தின் போது 100 முதல் 200 அழைப்புகள் நாளாந்தம் பதிவாகியிருந்தன என்று செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 70 சதவீதமான முறைப்பாடுகள் குடும்ப வன்முறைகள் பற்றியதாக இருந்தது. அதிகளவான பெண்கள் வன்முறைகளுக்கு இலக்கான காரணத்தினால் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றமை  குறித்து சுகாதாரத் துறையினர் பெரும் கரிசனையை வெளியிட்டிருந்தனர். மற்றொரு தகவல்களின்படி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து சேவைக்கு பொதுவாக நாளாந்தம் 300 நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்ற போது அதில் 3 முதல் 5 பெண்கள் குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் இதற்கு மாறாக நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் விபத்துச்சேவையில் அனுமதிக்கப்படும் 100 நோயாளிகளில் 10 பேர் குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். 

இந்தவகையில் பெண்கள் எதிர்கொள்கின்ற குடும்ப வன்முறையின் தீவிரத்தன்மையையும், பெண்களுக்கு எதிரான ஜனநாயக மறுப்பினையும் கருத்திற்கொண்டு குறிப்பாக கொவிட் 19 பெருந்தொற்று காலத்தில் இந்த நிலைமையை ஆராய்ந்து அறியும் முகமாக  நீதிக்கும் சமத்துவத்திற்குமான நிலையம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் நவம்பர் ஆகிய காலப்பகுதிகளில் புத்தளம், அனுராதபுரம், மட்டக்களப்பு, கிளிநொச்சி, அம்பாந்தோட்டை, மொனராகல ஆகிய  ஆறு மாவட்டங்களில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வின் துரித மதிப்பாய்வு அறி;க்கையை கடந்த ஆகஸ்ட் 22ம் திகதி வெளியிட்டிருந்தது. இந்த ஆய்வு இலங்கையில் நிகழும் குடும்ப வன்முறைகளின் யதார்த்த நிலையை அறிந்துகொள்ளக் கூடிய ஒரு சிறந்த ஆவணமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலே குறிப்பிடப்பட்ட  மாவட்டங்களில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான நிலையத்தின் மாவட்ட பங்குதாரர்களுடன் இணைந்து இந்த மதிப்பாய்வு முன்னெடுக்கப்பட்டதுடன் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கான சேவைகளை வழங்கும் முன்நிலை அரசாங்க உத்தியோகத்தர்களான இலங்கை காவல்துறை, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவள ஆலோசனை உத்தியோகத்தர்கள். கிராம உத்தியோகத்தர்கள், பொது சுகாதார தாதியர், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், மருத்துவர்கள், தாதியர் மற்றும் உள்நாட்டு பெண்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் மத்தியில் மேற்கொண்ட நேர்காணல்களின் அடிப்படையில் இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அனுராதபுரம், புத்தளம், மட்டக்களப்பு, அம்பந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து தலா 10 பேரும், கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 8 பேரும், மொனராகல மாவட்டத்திலிருந்து 7 பேருமாக மொத்தம் 55 பேர் இவ்வாறு நேர்காணல் செய்யப்பட்டு குடும்ப வன்முறைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டிருந்தன. எனினும் நாட்டின் சூழ்நிலை காரணமாக குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மற்றும் குடும்ப வன்முறைகளிலிருந்து மீண்டு வந்த பெண்களின்  கருத்துக்கள் இந்த மதிப்பாய்வில் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


வெளியாகிய முக்கிய தகவல்கள்

இந்த மதிப்பாய்வில் குடும்ப வன்முறைகள் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக குடும்பத்தில் நெருக்கமானவர்களினால் (வாழ்;க்கைத்துணை, தாய் தந்தை, மாமனார், மாமியார்)  வன்முறைகள் இடம்பெறுகின்ற அதேநேரம் அவை தொடர்பில் பாதிக்கப்படும் பெண்கள் நேரடியாக முறையிட தயக்கம் காட்டியுள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.  கலாசாரக் கட்டுப்பாடுகள், பிள்ளைகளின் எதிர்காலம் என்பனவற்றை கருத்திற்கொண்டு இந்த வன்முறைகள் தொடர்பிலான  முறைப்பாடுகள் பெண்களால் பெரும்பாலும் தவிர்க்கப்படுகின்றன. மேலும் பிள்ளைகளினூடாகவும், உறவினர்களினூடாகவும் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இந்த ஆய்வில் பங்குபற்றிய   உத்தியோகத்தர்கள் தெரிவித்திருந்தனர்.

உதாரணமாக கிளிநொச்சியில் கணவரால் தீ மூட்டப்பட்ட பெண் இந்த சம்பவம் தொடர்பில் கணவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டதுடன், பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அமைதியாக இருந்துள்ளார். குடும்ப வன்முறைகள் தொடர்பான அயலவர்களின் முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை மேற்கொள்ள சென்றால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று பாதிக்கப்படும் பெண்கள் மறுத்துவிடும் போக்கு உள்ளதாக அனுராதபுரத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதே கருத்தினை வலியுறுத்தும் சுகாதாரத்துறையினர், குடும்ப வன்முறைகள் காரணமாக படுகாயங்களுக்குள்ளாகி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்படும் பெண்கள் பகலில் வன்முறைகள் நடைபெறுவதில்லை என்றும், இரவில் மட்டும் தான் வன்முறைகள் நடக்கின்றது என்று கூறி தனக்கு தானே சமரசம் செய்து கொண்டு குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய மறுத்து விடுகின்றனர். 

அனுராதபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், கொவிட் காலத்தில் சிகிச்சைக்காக வரும் பெண்கள் பலர் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்ற விடயத்தை ஆய்வில் சுட்டிக்காட்டியிருந்தார். சிகிச்சைகளுக்காக வரும் பெரும்பாலான பெண்களின் உடல் மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு குடும்ப வன்முறைகள் மூல காரணமாக உள்ளது என்ற விடயம்  ஆய்வின் மூலம் மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.   

இதன்படி இவ்விடயங்களை எடுத்து நோக்கும் போது பெண்கள் எதிர்நோக்கும் குடும்ப வன்முறைகளானது சமூகத்தினால் பொதுவானதொரு விடயமாகவே அணுகப்படுகின்றது என்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குடும்ப வன்முறைகளினால் பாதிக்கப்படும் பல பெண்கள் இதனை ஒரு வன்முறையாக அடையாளம் காண மறுத்துவிடுகின்றனர். குடும்பம் என்ற அமைப்புக்குள் எதிர்கொள்கின்ற அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் பெண்கள் தமக்குள் நியாயப்படுத்திக்கொள்ளும் போக்கினையே இங்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும். 

வன்முறை வடிவங்கள் 
ஆய்வில் பெறப்பட்ட  தகவல்களின்படி குறிப்பாக குடும்ப உறுப்பினர்களின் மத்தியில் காணப்படும் போதைமருந்துகள் பாவனையும் மது பாவனைக்கு அடிமையான நிலைமையும்  பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு பிரதான காரணங்களாக உள்ளன. கொவிட் காலத்தில் வீடுகளில் முடங்கியிருந்தமையும், மது பாவனைக்கு அடிமையானவர்களுடன் ஒரே  இடத்தில் இருக்க வேண்டிய நிலைமையும் பிரச்சினையின் தீவிர தன்மைக்கு  காரணமாக அமைந்திருந்தது. இதன் காரணமாக  பெண்கள் மத்தியில் தற்கொலை முயற்சிகள் பல இடம்பெற்றமையை கிளிநொச்சி மாவட்டத்தில் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பாலியல் வல்லுறவு சம்பவங்கள், இளவயது திருமணங்களுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட சம்பவங்கள், கட்டாய பாலியல் உறவு போன்ற விடயங்களும் பரவலாக இடம்பெற்றுள்ளன.  

இங்கு குறிப்பிடத்தக்க மற்றொரு விடயம் இக்காலப்பகுதியில் வன்முறைகள் உடல் ரீதியில் மட்டுமன்றி உணர்ச்சி ரீதியாகவும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டிருந்தமையாகும். பெண்களின் உறவினர்களுடன் தொடர்பாடல்களை மேற்கொள்ள அனுமதிக்காமை, குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைத்தல், பிள்ளைகள் முன்னிலையில் சிறுமைப்படுத்தல் போன்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பதிவாகியிருந்தன. ஊர் மக்களுடனும் அயலவர்களுடனும் உறவுகளைப் பேண விடாமையினால் சமுர்த்தி கொடுப்பனவுகளை கூட பெற முடியாத நிலை பெண்களுக்கு ஏற்பட்டிருந்தது. 

கிளிநொச்சி, மொனராகல பகுதிகளில் நுண்நிதி கடன் பிரச்சினை காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள் குடும்ப வன்முறைகளில் பெரும் தாக்கத்தை செலுத்தியிருந்தன. பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் மொனராகல மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் பதிவாகியிருந்தன. தொழில் இழப்பு, வருமானம் இன்மை என்பன காரணமாக பெண்கள் தத்தமது அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

தொலைபேசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால்  மனநல ஆலோசனைகளை தொடர்ச்சியாகப் பெற முடியாத நிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருந்தது.  குறிப்பாக அனுராதபுரம், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கிராமிய பகுதிகளை விட நகர்ப்புறப் பகுதிகளிலேயே அதிகளவு குடும்ப வன்முறைகள் பதிவாகியிருந்தன. 

குடும்பங்களில் நிலவிய பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காரணமாக பிள்ளைகள் எதிர்நோக்கிய நேரடி மறைமுக பாதிப்புகள் குறித்தும் இந்த ஆய்வு கவனம் செலுத்தியிருந்தது. ஒட்டுமொத்தமாக நோக்கும் போது குடும்ப வன்முறைகள் தொடர்பாக முறைப்பாடு செய்வது அவமானத்திற்குரிய வி;டயம் என்றும் குடும்பத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் என்றும்  பாதிக்கப்பட்ட பெண்கள் கருதுகின்றமையை பொதுவாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 
பெருந்தொற்று காலப்பகுதியில் நாடு முடக்கப்பட்டதனால் உதவிகளையும் சேவைகளையும் வழங்கும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இதுவும் குடும்ப வன்முறை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருந்தது.

குறிப்பாக பொலிஸாரும், சுகாதாரத்துறையினரும் இக்காலப்பகுதியில் அதிகளவு பணிகளில் ஈடுபட்டடிருந்தமையினால் குடும்ப வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளில் போதியளவு கவனம் செலுத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டிருந்தது. அது மட்டுமன்றி குடும்ப வன்முறைகளினால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் பெண்களுக்கு தற்காலிக அடைக்கலத்தை வழங்கும் தற்காலிக இருப்பிடங்கள் தொடர்பிலும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டன. குடும்ப வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை கையாள போதுமானளவு ஊழியர்கள் இன்மையும் இங்கு பிரச்சினையாக ஆய்வில் இனம் காணப்பட்டுள்ளது. 

நாட்டில் பயணத்தடை அமுலில் இருந்ததனால் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளும், மனநல ஆலோசனைகளும் தொலைபேசியினூடாக முன்னெடுக்கப்பட்ட நிலையில் தொலைபேசி வசதிகளைப்பெறுவது மட்டுப்படுத்துப்பட்டமையின் காரணமாக உதவிகளை வழங்குவோரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவைகளை வழங்குவோரும் பெரும் இன்னல்களை எதிர்கொண்டிருந்தமையையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

மதிப்பாய்வின் அடிப்படையிலான பரிந்துரைகள்  

கொவிட் பெருந்தொற்று  போன்றதொரு கட்டுப்படுத்தப்பட்ட சமூக நடமாட்ட காலங்களிலும்  நெருக்கடி மிக்க அவசர அனர்த்த சூழ்நிலைகளின் போதும்  குடும்ப வன்முறைகள் போன்று பெண்கள் எதிர்கொள்கின்ற  பால்நிலை அடிப்படையிலான  வன்முறைகளிலிருந்து பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ எவ்வாறான திட்டங்களை வகுக்க முடியும் என்பது தொடர்பில் இந்த மதிப்பாய்வினூடாக  பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நலன் தரும் அவர்களை முதன்மைப்படுத்தும்  இடர் முகாமைத்துவ திட்டங்களாக,  குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தல். நிவாரணக் குழுக்களிலும் மற்றும் இதர உதவி குழுக்களிலும் சமமான பெண்கள் பிரதிநதித்துவத்தை  உறுதிப்படுத்தல். இனப்பெருக்க சுகாதார சேவைகளையும், பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான சேவைகளையும் அத்தியவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அனர்த்த காலங்களிலும் சேவைகளை முன்னெடுக்க வழியமைத்தல். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவையுடையவர்கள், பால்நிலை அடையாளம் மற்றும் பால்நிலை நோக்கு காரணமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளவர்கள்,  சுகவீனமுற்றவர்கள், தொழிலை இழந்தவர்களுக்கு நிதி உதவிகளை வழங்குதல் மனநல உதவி சேவைகள், ஆலோசனை சேவைகள் தொடர்பில் முக்கிய அவதானத்தை செலுத்தல் என்பன பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் அக்கறைக்காட்டப்படுதவ்

மேலும்   நெருக்கடி மிக்க  காலங்களில்  அவசரகாலங்களில் குடும்ப வன்முறை தொடர்பான வழக்குகளுக்கு முக்கியத்துவம் அளித்தல்,  குடும்ப வன்முறைகள் பற்றிய வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தல், இவ்வாறான முறைப்பாடுகளை கையாளுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு சிறப்பு பயிற்சிகளை அளித்தல். குறிப்பாக பெண்கள் சிறுவர் பிரிவுக்கு பயிற்சி அளித்தல், சேவைகளை வழங்குவதற்கு ஏதுவான முறையில்  இதர வசதிகளை அவர்களுக்கு  செய்து கொடுத்தல் என்பன நீதித்துறை சார்ந்த பரிந்துரைகளாகும்.

குடும்ப வன்முறைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளில் திருப்தியில்லை என்று கிளிநொச்சி. மட்டக்களப்பு மற்றும் அனுராதபுர மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். முறைப்பாடுகளை ஏற்று சட்ட நடவடிக்கைகளை எடுப்பதனைத் தவிர்த்து பொலிசாhர் சமரச முயற்சிகளிலேயே தீவிரம் காட்டுகின்றனர் என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் குடும்ப வன்முறை வழக்குகள்  மிகவும் அவசரமான விடயம் என்று கருதப்படுவதில்லை  என்றும் கூறப்படுகின்றது. 

அதேநேரம் இவ்விடயம் தொடர்பில் எங்கு முறைப்பாடு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் அறியாதுள்ளனர். குறிப்பாக இவ்வாறான முறைப்பாடுகள் கிராம உத்தியோகத்தர்களுக்கே அதிகளவில் செல்வதால் அவர்களின் வேலைப்பளு மத்தியில் இவ்வாறான முறைப்பாடுகள்  கவனத்திற் கொள்ளப்படுவது அரிதாகவே உள்ளது. இவை பற்றி கவனம் செலுத்தப்படுதல் அவசியம் என்றும் மதிப்பாய்வு பரிந்துரைத்துள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .