2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

'சுயதொழில்களை ஏற்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 15 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அம்பாறை மாவட்டத்தில் இளைஞர், யுவதிகள் மற்றும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் விரைவில் பல்வேறு திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுப் பிரதேசத்துக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அங்கத்துவ வாரத்தை அப்பிரதேசத்தில் திங்கட்கிழமை (14) மாலை ஆரம்பித்துவைத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'முதற்கட்டமாக 1,000 யுவதிகள் தைய்யல் பயிற்சிக்கு இணைக்கப்படவுள்ளதுடன், பயிற்சியின் இறுதியில் அவர்களுக்கு இலவசமாக தையல் இயந்திரங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், 500 பேருக்கு சுயதொழில்களுக்கான உபகரணங்கள் மற்றும் உதவித்திட்டங்கள் வழங்கப்படவுள்ளன' என்றார்.

'இதற்கு மேலதிகமாக சம்மாந்துறைப் பிரதேசத்தில் கைத்தொழில் வலயமொன்றை நிறுவி வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கும் ஒழுங்கு செய்யப்படுகின்றது. ஒலுவில், பாலமுனைப் பிரதேசங்களை மையப்படுத்தி 500 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் பொருட்டு பாரிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.  

இத்திட்டங்கள் யாவும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அடுத்த வாரமளவில் அமைச்சர் ரிஷாட்; பதியுதீன் அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்து இவற்றுக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளார்' என்றார்.

'நல்லாட்சி அரசாங்கத்தில் 10 இலட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அளித்துள்ள உறுதிமொழிக்கமைய இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகளை தனது அமைச்சின் மூலம் வழங்குவதற்கு அமைச்சர் ரிஷாட்; பதியுதீன் பொறுப்பேற்றுள்ளார். அவற்றுள் அம்பாறை மாவட்டத்துக்கான பங்கை மேற்படி திட்டங்கள் ஊடாக வழங்குவதற்கு அமைச்சர் முன்வந்துள்ளார்' எனவும் அவர் மேலும் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .