2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

பெண் ஊழியருக்கு அறைந்த உத்தியோகத்தர் கைது

Editorial   / 2020 ஜனவரி 06 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

பெண் ஊழியரொருவருக்கு அறைந்த தலைமை உத்தியோகத்தர், இன்று (06) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளாரென, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் திருமதி தவப்பிரியா சுபராஜ்(வயது34) என்பவரை, அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்  ஜ.எல்.ஏ.கார்லிக், கடந்த 1ஆம் திகதியன்று கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

தாக்கிய மேற்படி உத்தியோகத்தரைக் கைது செய்யவேண்டுமென அரசியல்வாதிகளும் பெண்ணுரிமை பேணும் அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியிருந்தன.

தலை​மறைவாகியிருந்த அவரைத் தேடி வந்த சம்மாந்துறைப் பொலிஸார், பெரும் பிரயத்தனத்தின் மத்தில் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட உத்தியோகத்தரை, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம் இரத்து

நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தரைக்  கைதுசெய்ய வலியுறுத்தி, பெண்ணுரிமை அமைப்புகள், இன்று (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஏற்பாடுகள் செய்திருந்தன.

ஆனால், குறித்த உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதையடுத்து நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டங்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளன​ என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி சுரந்த ஜயலத் எடுத்த முயற்சிக்கு, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் நேரில் சென்று பாராட்டுத் தெரிவித்தார்.

இச்சம்பவத்தால் ஏற்படவிருந்த இனமுறுகல் நிலைமையைத் தடுத்ததுடன், சட்டத்தை துரிதமாக நிலைநாட்டியமைக்காக தனது நன்றியை அவர் தெரிவித்தார்.

பெண் ஊழியர் இடமாற்றம்

இதேவேளை, கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 05 நாள்களாக சிகிச்சைபெற்று வந்த தாக்குதலுக்குள்ளான பெண் ஊழியர் தவப்பிரியா, மேலதிக சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு, நேற்று (05) இடமாற்றப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .