2021 ஜூலை 26, திங்கட்கிழமை

மாகாண அதிபர் சேவையை உருவாக்கக் கோரிக்கை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 10 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நீண்டகாலமாக பதில் அதிபர்களாக கடமையாற்றி வருவோரின் நிரந்தர நியமன விடயத்தில் மத்திய அரசாங்கம் கைவிரித்துள்ளதால், மாகாண அதிபர் சேவையொன்றை உருவாக்குமாறு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோவிடம் இலங்கை கல்வி நிர்வாக அதிகாரிகளின் கிழக்கு மாகாணச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருக்கு மேற்படி சங்கத்தின் செயலாளர் ஏ.எல்.எம்.முக்தார் இன்று வியாழக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களிலும் சுமார் 300 பதில் அதிபர்கள் கடமையாற்றுகின்றனர். இவர்கள் பல்வேறு சூழ்நிலைகளில் பாடசாலைகளைப் பொறுப்பேற்று பல வருடங்களாக மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். இவர்களை இலங்கை அதிபர் சேவைக்குள் உள்வாங்குமாறு மத்திய கல்வி அமைச்சிடம் கோரியபோதிலும், அவ்வாறு நிரந்தரச் சேவைக்குள் இணைப்பதற்கான வாய்ப்பு இல்லையென்று கைவிரித்துள்ளது. இதன் காரணமாக அவர்கள் தங்களின் தொழில் மற்றும் பதவி உயர்வு தொடர்பில் ஏமாற்றம் அடைந்துள்ளனர்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கமைய மாகாணத்துக்குள்; நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு வழங்குதல் ஆகியன ஆளுநரின் அதிகாரத்துக்கு உரித்தாக்கப்பட்டுள்ளதால் மாகாணப் பாடசாலை அதிபர்களுக்கான மாகாண அதிபர் சேவையை உடனடியாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இம்மாகாணத்தில் ஏற்கெனவே மாகாண அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை, மாகாண சமூக சேவை, உள்ளூராட்சிச் சேவை, வருமானவரிச் சேவை மற்றும் கூட்டுறவுச் சேவை  உருவாக்கப்பட்டு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போன்றதொரு சேவையை பதில் கடமை புரியும் அதிபர்களுக்காக உருவாக்கி, அவர்களின் அதிபர் சேவையை நிரந்தரமாக்குவது காலத்தின் தேவையாகும். இதன் மூலமே பாதிக்கப்பட்டுள்ள பதில் அதிபர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். இதற்கான அமைச்சரவை வாரியப் பத்திரத்தை மாகாணக் கல்வி அமைச்சர் மூலம் சமர்ப்பிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .