2021 ஜூன் 14, திங்கட்கிழமை

’யுத்தத்துக்குப் பின் இனமுறுகல் அதிகரித்துக் காணப்படுகின்றது’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2017 மே 25 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கையில் வாழ்கின்ற மக்களுக்கு இடையில் யுத்தத்துக்குப் பின்னர், இன முறுகல் அதிகரித்துக் காணப்படுகின்றது என சர்வதேச இனத்துவக் கற்கைகளுக்கான நிலையத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.என்.எம்.பஸ்லான் தெரிவித்தார்.

'இலங்கையில் மதம் சமூகங்களுக்கு இடையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புதல்' எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (24) மாலை நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, 'சமூகங்களுக்கு இடையில் அதிகரித்துக் காணப்படும் இன முரண்பாடுகளினால், மக்கள் நாளாந்தம் அச்சத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

'இந்த நிலைமையை இல்லாமல் செய்வதற்கு வெறுமனே பேச்சளவில் மாத்திரம் நின்றுவிடாமல், இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்டு, சமூகங்களுக்கு இடையில் சக வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சர்வதேச இனத்துவ கற்கைகளுக்கான நிலையமானது வட மாகாணத்தில் மன்னார், யாழ்ப்பானம் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும் தென் மாகாணத்தில் மாத்தறை, காலி ஆகிய மாவட்டங்களிலும் சக வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கான ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது' என்றார்.  

'ஒரு நாடு அபிவிருத்தி அடைய வேண்டுமாயின்,  அங்கு மத ஐக்கியம், புரிந்துணர்வு என்பன காணப்பட வேண்டும். அப்போதே நிறைவான அபிவிருத்தியைக் காண முடியும்.

'இலங்கையில் மதங்களுக்கு இடையிலான சக வாழ்வை மனித உரிமைகள் அடிப்படையிலான அணுகுமுறையின் ஊடாக வளர்க்க வேண்டும்.

கடந்த காலத்தில் நாம் பல இன்னல்களை சுமந்தவர்களாக வாழ்ந்தோம். அதன் காரணமாக  ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொருவரையும் வேற்று மனப்பான்மையுடன் பார்த்த வரலாறு உண்டு.

எனவே, நாம் நிம்மதியாக வாழ்ந்தாலே, எதிர்கால சமூகம் நிம்மதியாகவும் சுமுகமாகவும் வாழும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .