2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

மருதமுனை ‘பிரென்ச் சிற்றி’ சுனாமி வீடமைப்பு திட்டத்தில் சுகாதார அச்சுறுத்தல்:கவனிப்பார் யாருமில்லை!

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 13 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யூ.எல். மப்றூக்)

சுனாமியினால் பாதிப்படைந்த மருதமுனை மக்களுக்காக – மருதமுனை மேட்டுவட்டையில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள ‘பிரென்ச் சிற்றி’ வீட்டுத் திட்டப் பகுதியில் பல்வேறு குறைபாடுகளும், மிக மோசமான சுகாதாரச் சீர்கேடுகளும் நிலவுவதாக அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

இங்குள்ள வீடுகளின் மலசலகூடக் குழிகள் சரியான முறையில் நிர்மாணிக்கப்படாமையால், இந்தக் குழிகளிலிருந்து வெளியேறும் அசுத்த நீர் - வீதிகளில் பரவி, ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது.

இதனால், இப்பகுதியில் துர்வாடை வீசுவதோடு, சுகாதார அச்சுறுத்தல் தோன்றியுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த வீட்டுத் திட்டப் பகுதியில் வடிகான் வசதிகள் இல்லாமையால், குடியிருப்பாளர்கள் வசிக்கும் வீடுகளின் கழிவு நீரும் வீதிகளில் பரவி நிற்கின்றது. இதனால் பாதைகள் அசுத்தமடைவதோடு, இந்தக் கழிவு நீரினால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மேற்படி வீட்டுத் திட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதாகவும், இந்தக் குப்பைகளை இப்பகுதியினை நிர்வகிக்கும் கல்முனை மாநகரசபையினர் தொடர்ச்சியான முறையில் சுத்தப்படுத்துவதில்லை என்றும் குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரான்ஸ் நாட்டு செஞ்சிலுவைக் சங்கத்தின் நிதியுதவியின் கீழ் அமைக்கப்பட்ட மேற்படி ‘பிரென்ச் சிற்றி’ வீட்டுத் திட்டத்தில் 179 வீடுகள் உள்ளன.

சுமார் 16 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட மேற்படி வீட்டுத் திட்டம், கடந்த 2008 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
                                                                                                                              
                                                                                                                                                 
                                                     
                                                                           
                                                                                                                                                                                                                                                                                              

    
    

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .