2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அலியார் வீதி புனரமைப்பு விவகாரம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கிழக்கு மாகாணசபையின் 93 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் கல்முனை அலியார் வீதியைப் புனரமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றபோதிலும், அது தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் எதுவும் கவனத்திற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்; நடவடிக்கை எடுக்கவிட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து, முறைகேடான புனரமைப்புத் திட்டத்துக்;கு எதிராக தடையுத்தரவு பெறப்படுமென சிவில் சமூக ஆர்வலர் ரீ.எல்.எம்.பாறூக் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை அவர் மேலும் தெரிவிக்கையில், 'அலியார் வீதியை அண்டி பாடசாலை, பள்ளிவாசல் உட்பட பல அரசசார்பற்ற நிறுவனங்கள்; இருக்கின்றன. கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக எவ்வித புனரமைப்புமின்றிக் காணப்படும் இவ்வீதி, மழைக்காலத்தில் வெள்ளத்தில் மூழ்குதால் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுகின்றன. வீதியால் செல்வோரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இந்நிலையில் 1,050 மீற்றர்; நீளமான இவ்வீதியை கார்ப்பெட் வீதியாக புனரமைப்பதற்காக கிழக்கு மாகாணசபையால் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கை வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீதியைத் தோண்டி, ஆழமாக்காமல் புனரமைப்பதற்கும்  200 மீற்றர் தூரத்துக்கு வடிகான் அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இவ்வீதியை போதுமானளவு ஆழமாக்கி, புனரமைப்புவேலை முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன், ஏற்கெனவே அங்கும் இங்குமாக தொடர்பற்ற நிலையில் நிர்மாணிக்கப்பட்டு, சீரற்ற நிலையில் காணப்படுகின்ற வடிகான்கள் தொடர்புபடுத்தப்பட்டு, மீளப் புனரமைக்கப்பட வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த ஒரு சில தினங்களில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரால் வீதி புனரமைப்புக்கான அடிக்கல் நடப்படவுள்ளதாக அறிகின்றோம்.

அதேவேளை, 2014ஆம் ஆண்டு இவ்வீதியை கார்ப்பெட் வீதியாக புனரமைப்பதற்காக மத்திய அரசாங்கத்தால் ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, 2014-11-19 ஆம் திகதியன்று அடிக்கல் விழாவும் நடைபெற்றிருந்த போதிலும் சிலரின் தவறுகள் காரணமாக அந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படாமல், நிதி திரும்பிச் சென்றிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.அவ்வாறாயின் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள குறைந்த நிதியான 93 இலட்சம் ரூபாயைக் கொண்டு எவ்வாறு இவ்வீதியை முழுமையாக புனரமைப்பு செய்யப் போகிறார்கள்?

ஆகையினால் கிழக்கு மாகாண முதலமைச்சர்; இது விடயத்தில் உடனடியாக தலையிட்டு, எமது கோரிக்கைகளை  உள்வாங்கி, வீதி புனரமைப்பின் தரத்தைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரி அவ்வீதியில் வசிக்கும் 47 குடும்பத் தலைவர்கள் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றை அனுப்பியுள்ளோம். இது தொடர்பில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்காவிடின் நீதிமன்ற தடையுத்தரவை பெறுவோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X