2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2022 ஜூலை 31 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கடற்றொழிலை தங்குதடையின்றி, கிரமமாக முன்னெடுப்பதற்கு போதியளவு எரிபொருளை பெற்றுத்தருமாறு கோரி கல்முனைப் பிரதேச ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் இன்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்முனை ஆழ்கடல் மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனை ஹுதா திடலை அண்மித்த கடற்கரைப் பகுதியில் சங்கத்தின் தலைவர் எம்.ஏ.எம்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மீனவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமது கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு, கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபாட்டிருந்தனர்.

கடந்த பல மாதங்களாக நிலவி வருகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனைப் பகுதியில் கடற்றொழில் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிர்க்கதியடைந்திருப்பதாகவும் கல்முனை மாநகர எல்லையினுள் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருந்தும் கூட கடற்றொழிலுக்காக தங்களால் டீசலைப் பெற்றுக்கொள்ள முடியாதிருப்பதாகவும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

கல்முனைப் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது போதியளவு டீசல் வருகின்ற நிலையில், மீன்பிடிப் படகுகளுக்கென தங்களால் டீசலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை எனவும், டீசல் விநியோகத்தின்போது தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அதனை வழங்குமாறு கடற்றொழில் திணைக்களத்தின் உறுதிப்படுத்தலுடன் பிரதேச செயலாளரினால் சிபார்சுக் கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் எரிபொருள் நிலையங்களில் அதற்கு மதிப்பளிக்கப்படாமல், பதுக்கல் வியாபாரத்தில் ஈடுபடுகின்ற மாபியாக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது எனவும் இதன்போது அவர்கள் விசனமும் கண்டனமும் வெளியிட்டனர்.

இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வினைப் பெற்றுத்தருவதற்கு கடற்றொழில் அமைச்சரும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் அவசர நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென மீனவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, மீனவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து, இப்பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கான முக்கிய கூட்டம் ஒன்று, இன்று (31) கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .