2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஒலுவில் துறைமுக வடிவமைப்புத் தொடர்பில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 13 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யூ.எல்.மப்றூக்

ஒலுவில் பிரதேசத்தில் பாரிய கடலரிப்பு ஏற்படுவதற்கு காரணம், ஒலுவில் துறைமுக வடிவமைப்பில் ஏற்பட்ட தவறா என்பதைக் கண்டறிவதில் துறைமுகங்கள் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஒலுவில் துறைமுகத்தின் வடிவமைப்புத் தொடர்பில், ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதனை வடிவமைப்புச் செய்த 'டனிடா' நிறுவனத்திடம்  துறைமுகங்கள் அதிகாரசபை கோரியுள்ளது. ஒலுவில் துறைமுகத்தை அண்டி ஏற்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கு இந்த ஆய்வு அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பு மற்றும்  இதனால் ஏற்பட்டுள்ள அழிவுகளை பார்வையிடுவதற்கு
அமைச்சர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் சனிக்கிழமை (12) அங்கு வருகை தந்தனர்;. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'ஒலுவில் துறைமுகத்தின் வடிவமைப்பில் ஏற்பட்ட தவறுகளினால் கடலரிப்பும் அழிவுகளும் ஏற்பட்டிருக்குமாயின், இதற்கான நஷ்டஈட்டை துறைமுகங்கள் அதிகாரசபையினர் வழங்கவேண்டும். இது தொடர்பில் நாம் தீர்க்கமாக பேசவுள்ளோம்.

'கடலரிப்பினால் ஏற்பட்டுள்ள பாதிப்பின் பாரதூரத்தை பார்வையிட்டபோதே, விளங்கிக்கொள்ள முடிந்தது' என்றார்.  

'இவ்வாறிருக்க, ஒலுவில் துறைமுகம் வருமானம் ஈட்டுகின்ற துறைமுகமாக இல்லை. எனவே, இந்தத் துறைமுகத்தை முதலில் வருமானம் ஈட்டும் துறைமுகமாக மாற்றவேண்டும். இதற்குரிய சில திட்டங்கள் குறித்து நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். இந்தத் துறைமுகத்துக்கு முதலீட்டாளர்களை அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.

கடலரிப்பினால் மக்கள் தங்களின் தொழிலை இழந்துள்ள  நிலையில், துறைமுகத்தை இயங்கச்செய்து, அதன் மூலம் அங்கு அவர்கள் வேறொரு தொழிலையாவது பெற்றுக்கொள்வதற்கு வழிவகைகள் செய்யப்பட வேண்டும்' எனவும் அவர் கூறினார்.

மேலும், இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக குறிப்பிட்டதொரு நிதியை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சிடம் நாங்களும் கலந்துரையாடி நிதியை பெற்றுக்கொடுப்பதில் முனைப்புக் காட்டவுள்ளோம்.

இதன்போது அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்த ஒலுவில் பிரதேச மக்களும் மீனவர்களும், கடலரிப்பின் காரணமாக தாம் எதிர்கொண்டுவரும் பாரிய பிரச்சினைகள் குறித்து விளக்கிக் கூறினர்.

இந்த விஜயத்தின்போது - பிரதியமைச்சர் பைசால் காசிம், நாடாளுமன்ற உறுப்பினர்களான, அலிசாஹிர் மௌலானா, எம்.ஐ.எம். மன்சூர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் சமூகமளித்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X