2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் கொரோனா தடுப்பு வெற்றிகரமாக முன்னெடுப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 12 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் எமது பகுதி கொரோனா அற்ற பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டு, ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

எமது பகுதியில் கொரோனா தடுப்பு செயற்பாடுகளில் அயராது உழைத்து வருகின்ற சுகாதாரத்துறையினர், பொலிஸ், முப்படையினர், மாநகர சபை மற்றும் பிரதேச செயலகங்களின் அதிகாரிகாரிகள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இத்தருணத்தில் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதாகவும் ஒத்துழைப்பு வழங்கிய வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மாநகர மேயர் மேலும் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

"இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதும் அரச பாடசாலைகளை மூடுவதற்கான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்ட அன்றைய தினமே கல்முனை மாநகராட்சி எல்லைக்குள் அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் மூடுவதற்கு நான் நடவடிக்கை எடுத்திருந்தேன். 

“ஆரம்ப நிலையிலேயே, கொரோனா தாக்கம் பற்றி மக்களை விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டதுடன், சிறுவர் பூங்காக்கள், கடற்கரை பகுதிகள், விளையாட்டு மைதானங்கள் என்று அனைத்து பொது இடங்களிலும் மக்கள் ஒன்றுகூடுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். திருமணம் உள்ளிட்ட அனைத்து பொது வைபவங்களுக்கும் தடை விதித்திருந்தோம்.

“அத்துடன், கல்முனை மாநகர பிரதேசங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மாநகர சபை, பிரதேச செயலகங்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ், முப்படையினர், வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய செயலணி ஒன்றை அமைத்து, ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுடன் தேவையான தீர்மானங்களை மேற்கொண்டு, அவற்றை சிறப்பாக அமுல்படுத்தி வருகின்றோம்.

“அவ்வாறே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவதற்கு முன்பதாகவே கல்முனையிலுள்ள பொதுச் சந்தைகளை மூடி, திறந்த வெளிகளில் சுகாதார நடைமுறைகளுடன் வியாபாரங்களை மேற்கொள்வதற்கான திட்டத்தை அறிமுகம் செய்து, அதற்கான ஏற்பாடுகளையும் இன்றுவரை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றோம்.

“ஊரடங்கு அமுலுக்கு கொண்டு வரப்பட்ட ஆரம்ப தினங்களிலேயே கல்முனை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலை மற்றும் முக்கிய வீதிகளிலும் அவற்றின் இரு மருங்கிலும் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள், வீடுகளின் முகப்புகள், மக்கள் கூடுகின்ற பொது இடங்களான பொதுச் சந்தைகள், பிரதான பஸ் நிலையம், ஐக்கிய சதுக்கம், அரச, தனியார் நிறுவனங்கள் முழுவதும் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகளையும் மாநகர சபையினால் முன்னெடுத்திருந்தோம். இப்பணிகளை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, பொலிஸ், இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

“மேலும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற வேளைகளில், கடைத்தெருக்களில் மக்கள் ஒன்று கூடாதவாறும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கி, அதற்கான பொறிமுறையை வகுத்து, முடிந்தவரை சிறப்பாக அமுல்படுத்தி வருகின்றோம்.  

“கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து எமது மக்களை பாதுகாப்பதற்காக நாம் மேற்கொண்டு வருகின்ற இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் சிலர் விமர்சனங்களை மேற்கொண்டு, சீர்குலைக்க முற்படுகின்ற போதிலும் எமது நோக்கம், இலக்கு என்பவற்றில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. 

“அதனால்தான் எமது பகுதி மக்களளிடையே கொரோனா வைரஸ் பரவல் ஏற்படாமல் இந்த நிமிடம் வரை பாதுகாக்க முடிந்திருக்கிறது. இதனால், எமது கல்முனை மாநகர பிரதேசங்கள் கொரோனா அற்ற பகுதியென பிரகடனம் செய்யப்பட்டு, விரைவில் ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படுகின்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது" என்று கல்முனை மாநகர மேயர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .